நாளிதழ் செய்திகள்
 

திண்ணிய எண்ணமே, குறிக்கோள்!
தினமணி
31/07/2018

தன்னிலை உயர்த்து! - 3
ஒரு மன்னர் மிகவும் வருத்தத்தோடும் கவலையோடும் காணப்பட்டார். தனது மகன், மகுடம் சூட வேண்டிய வயதிலும் ஒரு வீரனைப் போல் இல்லாமல் உடல் மெலிந்து இருக்கிறாரே என்ற வருத்தம் மன்னரை வாட்டியது. இளவரசனுக்கு நிறைய உணவு வகைகளையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி லேகியங்களையும் கொடுத்தார். ஆனாலும், மெல்லிய தேகத்திலிருந்து இளவரசன் மாறவேயில்லை. ஒரு நாள் முனிவர் ஒருவர் மன்னரைக் காண வந்தார். மன்னரின் முகக்குறிப்பை அறிந்து, ""உங்களுடைய மகன் விரைவில் இந்த நாட்டை ஆளுகின்ற வலிமை வாய்ந்த மன்னனாக உருப்பெறுவதற்கு ஏற்பாடு செய்கிறேன்'' என்றார். மன்னருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

""ஒரு நல்ல சிற்பியை வரவழையுங்கள் மன்னா'' என்றார், முனிவர். சிற்பியும் வருகை தந்தார். அச்சிற்பியிடம் ஒரு திடகாத்திரமான வலிமை வாய்ந்த வீரனைப் போல், இளவரசனது சிற்பத்தை வடிக்கச் சொன்னார். ஒரு வாரத்தில் அச்சிற்பம் தயாரானது. மன்னரின் அவையில் முனிவர் அச்சிற்பத்தை இளவரசனிடம் கொடுத்தார். அவ்வாறு தருகின்றபோது, ""ஒரு நாளில் எத்தனை முறை இச்சிற்பத்தைப் பார்க்க முடியுமோ... அத்தனை முறை பார்'' என்று கூறி இளவரசனை அனுப்பினார். இளவரசன் மறுநாள் காலையில் எழுந்ததும், உண்ணும்போதும், அறையில் உலவும்போதும், உறங்கியபோதும் அவர் கண்ணிலே அச்சிற்பம் பட்டு மனதிலே பிம்பமாய்ப் பதிந்தது. இளவரசனின் கனவிலே சிற்பத்திலிருப்பதுபோல் ஒரு வீர இளைஞனாக வரவேண்டும் என்ற ஆசை தோன்றியது.

அடுத்த நாள் அதிகாலையிலேயே ஓட்டம், குதிரையேற்றம், நீச்சல் பயிற்சி, வில்வித்தை என பல கலைகளிலும் இளவரசன் தன்னை ஐக்கியமாக்கினார். ஒவ்வொரு நாளும் நல்ல உணவுகளோடு உடற்பயிற்சியும் உடலுக்கு உரமானது, பொலிவற்று இருந்த உடலும், மனமும் நல்ல ஆரோக்கியமான மாற்றத்தால் வலுவாய் உருப்பெற்றதை அவரால் உணர முடிந்தது. மூன்றே மாதத்தில் அச்சிற்பத்தில் உள்ள இளவரசனைப் போல் கட்டழகு கைகள், கவின் மிகு தேகம் என திடகாத்திரமாகவே உருவாகியிருந்தார். மூன்று மாதத்தில் மன்னரின் கண்முன்னே ஒரு புஜபலம் பொருந்திய ஒரு புதிய இளைய தளபதி அந்நாட்டிற்கு உருவாகியிருந்தார். இம்மாற்றத்திற்கு காரணம் தனது இலட்சியத்தை சிற்பமாய்ப் பார்த்ததால்தான் என்றார் இளவரசன். இலக்கு தெரியாதவரை இளவரசன் ஒரு சாதாரண இளைஞன். இலக்கு தெளிவாகிய பின் இளவரசன் ஒரு வீரத்தலைவன். ஆம்! குறிக்கோள் தெளிவாகின்ற போது வாழ்க்கை தெளிவாகிறது .

சமயக்குரவர்கள் நால்வர்களில் ஒருவரான அப்பர் தனது வாழ்க்கை வரலாற்றினை படம் பிடித்துக் காட்டுவதுபோல "திருக்கொண்டிச்சரத்து' பாடலிலே எழுதியுள்ளார். அதில் தனது பால பருவத்தையும், காளைப் பருவத்தையும், முதுமைப் பருவத்தையும், அவர் குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்ததை, "பாலனாய் கழித்த நாளும், பனிமலர் கோதை மார்தம் மேலனாய் கழித்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து கோலனாய் கழித்த நாளும், குறிக்கோள் இலாது கெட்டேன்' என்கிறார். குறிக்கோளற்ற வாழ்வு, ஒரு குறையுள்ள வாழ்வு என்பதறிந்த பின்னர் குறிக்கோளோடு ஆன்மிகத்திற்காக மாபெரும் தொண்டாற்றினார். அதன் பின் அப்பரது வாழ்வு ஒரு குன்றின் மேலிட்ட விளக்கானது. குறிக்கோளில்லாத வாழ்க்கை திசைகாட்டி இல்லாத கடல் பயணம். அங்கே பயணம் இருக்கும், ஆனால் பலனிருப்பதில்லை.

மனித வாழ்விற்கு அடிப்படை, குறிக்கோள். ஒவ்வொரு மாணவனும் படிக்கின்றபோதே தன்னை ஓர் ஆசிரியராக, மருத்துவராக, பொறியாளராக, வழக்குரைஞராக, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரியாக, விளையாட்டு வீரனாக, அறிஞராக, கலைஞராக, கவிஞராக, கட்டுரையாளராக என ஏதாவது ஒருவகையில் தன்னை பரிணமித்துப் பார்ப்பதுண்டு. படிக்கின்ற மாணவர் ஒரு புழு என்றால், அழகிய வண்ணத்துப்பூச்சிதான் குறிக்கோளினை அடைந்ததன் அடையாளம். இக்குறிக்கோள்கள்தான் ஒரு தனிமனிதனின் வெற்றிக்கு அஸ்திவாரங்கள்.

இத்தகைய அஸ்திவாரங்களிலிருந்து "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப உயர்ந்து எழுவதுதான் உன்னதமான குறிக்கோள்கள். மருத்துவராகிய பின் மருத்துவத்தில் மகத்துவம் காண்பது உன்னதமான குறிக்கோள். அதேபோல் ஆசிரியராகிய பின் மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது, பொறியாளராகிய பின் உலகையே வியக்க வைப்பது, கலைஞராகிய பின் காண்பவர்களின் கண்கள் விரிய வைப்பது. விளையாட்டு வீரனாகிய பின் உலகையே உற்சாகத்தில் ஆழ்த்துவது என குறிக்கோள்களை பட்டை தீட்டி உன்னதமாக்கினால் தனிமனிதக் குறிக்கோளும் நிறைவேறுவதோடு இச்சமூகமும் அதனால் பயன்பெறும். அத்தகைய ""நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது'' என்கிறார் காரல் மார்க்ஸ். ""சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதனை அடைந்தே தீருவேன்'' என்ற பாலகங்காதர திலகரின் குறிக்கோள், "செய் அல்லது செத்துமடி' என மகாத்மா காந்தியின் இலட்சிய வரிகள்தாம் நம் தேசத்திற்கு விடுதலை பெற்றுத் தந்தது. திலகரும், காந்தியும் நம் தேசத்தின் வரலாறானார்கள்.

"தம்மின் தம்மக்கள் அறிவுடைமை' என்ற திருவள்ளுவரின் வரிகளை தங்களின் குறிக்கோளாக்கி ஒவ்வொரு பெற்றோரும் தங்களை விட தங்கள் குழந்தைகளை உயரிய நிலையை அடைய படிக்க வைக்கின்றனர். அதே நேரத்தில், படிக்கின்றபோதே தனது படிப்பால் தனது குடும்பத்தின் தரத்தை இன்றிருப்பதை விட பன்மடங்கு உயர்த்துவேன் என்ற மாணவனின் குறிக்கோள் மிகவும் உன்னதமானது.

குறிக்கோளினை மனிதன் தீர்மானிப்பது இயல்பு. ஆனால், மனிதர்களைக் குறிக்கோள்தான் தீர்மானிக்கிறது என்பது தான் நிஜம். குறிக்கோளில்லாத மனிதர்களை வாழும்போதே மக்கள் மறந்துவிடுகிறார்கள். தனிமனித வெற்றியை இலக்காகக் கொண்ட குறிக்கோள், அம்மனிதனோடு மறைந்துவிடுகிறது. தனது சமூகத்தினை உயர்த்திய குறிக்கோள்கள் அச்சமூகம் உள்ளவரை நிலைபெறுகிறது. இவ்வுலகம் உய்ய, உயர்ந்த குறிக்கோள்கள் கொண்டவர்கள்தான் இவ்வுலகே அழிந்தாலும் வாழ்ந்துகொண்டிருப்பர்.

"ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்திடல் வேண்டும்' என்ற ராமலிங்க சுவாமிகளின் இலட்சிய வார்த்தைகளும், "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!' என்ற தாயுமானவரின் குறிக்கோளும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலகிற்கு அறைகூவல் விட்ட கணியன் பூங்குன்றனாரின் சகோதரத்துவ சிந்தனையும், "சுதந்திரமான சுவர்க்க பூமியில் எனது நாடு விழித்தெழவேண்டும்' என்ற ரவீந்திரநாத் தாகூரின் "கீதாஞ்சலி'யின் ஏக்கமான வரிகளும் இந்த மண்ணினை மகத்துவமாக்கிய குறிக்கோளாளர்களின் வரிகள்.

குறிக்கோள்கள் பெரிதானால் நம் வாழ்க்கை பெரிதாகும். வாழ்க்கையில் மிகப்பெரிய இலட்சியம் வேண்டும் என்பதோடு நிறுத்தாமல் சிறு இலட்சியத்தை குற்றம் என்கிறார் நம் அப்துல் கலாம் அவர்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் ஒருவர், ""நாம் ஏன் இப்புவியில் இருக்கிறோம்?'' என்று கேட்டார். அதற்கு அவர், ""இப்பிரபஞ்சம் ஒரு விபத்து என்றால், நாமெல்லாம் விபத்துக்கள்தான். ஆனால் இப்பிரபஞ்சத்தால் ஏதாவது ஓர் அர்த்தம் இருந்தால் நமக்குள்ளும் ஓர் அர்த்தம் இருக்கிறது'' என்றார். அர்த்தமுள்ள வாழ்க்கைதான், அழகான வாழ்க்கை, அறிவான வாழ்க்கை, அற்புதமான வாழ்க்கை, ஆச்சரியமான வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கை குறிக்கோளில்லாமல் அமைவதில்லை. ஒரு தீர்க்கமான உயர்ந்த குறிக்கோளினை மனதில் ஆழமாய்ப் பதித்ததால் வெற்றி நிச்சயம்; வாழ்க்கையிலும் உயர்வு நிச்சயம். எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்ற திருவள்ளுவரின் வரிகள் ஒவ்வொரு இலட்சிய மனிதனின் மனதினிலும் ஆழப்பதியட்டும்.
நம் மனதிலே எண்ணம் உருவாகிறது. அது ஆழமாய் வேர்விட்டு ஆசையாய் முளைக்கிறது. பின்னர் குறிக்கோளாய் - மண்ணிலே செயல்பாடாய் வெளிவருகிறது. உண்மையில், நமது குறிக்கோள் நல்லதா? அதைத் தொடரலாமா? என்ற சந்தேகம் எழும்போது நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒரு மந்திரத் தாயத்தை தந்திருக்கிறார்.

"நீங்கள் பார்த்ததிலேயே ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்த பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகை செய்யுமா? என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்' என்பது தான் அந்த மந்திர தாயத்து.

"எழுமின்! விழுமின்! கருதிய காரியம் (குறிக்கோள்) முடியும் வரை நில்லாது உழைமின்!' என்ற சுவாமி விவேகானந்தரின் உயரிய சிந்தனைகளுக்கு உயிர் தர இந்தியர் ஒவ்வொருவரின் மனதிலும் திண்ணிய எண்ணம் உதயமாகட்டும்.
குறிக்கோளில்லாமல் வாழ்வது இறப்பு !
குறிக்கோளோடு வாழ்வதுவே சிறப்பு !!