நாளிதழ் செய்திகள்
 

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது [2]. மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

போட்டி தேர்வு பதினைந்தும் புதிது புத்தகம் வெளியீடு

போட்டி தேர்வு பதினைந்தும் புதிது புத்தகம் வெளியீடு. காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா.திருநாவுக்கரசு இ. கா. ப அவர்கள் எழுதிய போட்டி தேர்வு - பதினைந்தும் புதிது என்ற புத்தகத்தை வெளியிட காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சங்கர் ஜிவால் அவர்கள் பெற்று கொண்டார். புத்தக வெளியீட்டு விழாவில் இரா. திருநாவுக்கரசு இ.கா.ப அவர்கள் தாயார் மற்றும் அவரது குடும்பத்தார்கள் கலந்து கொண்டனர். தேர்வினை எதிர்கொள்ளும் அனைவருக்குமான புத்தகமாக இது இருக்கும்.

20/07/2024 மேலும் தொடர

19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ‘பதவி உயர்வு’.. 2 பேர் ஏடிஜிபி.. புத்தாண்டு பரிசு கொடுத்த தமிழக அரசு!

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் ஐஜி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்க நாளான இன்று, தமிழக காவல்துறையில் பணியாற்றும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இதற்கான உத்தரவை உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார். திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, அடிக்கடி காவல்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். பல சமயங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும், ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் புத்தாண்டின் முதல் நாளிலேயே பதவி உயர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளான ஆனந்த்குமார் சோமனி, ஆர்.தமிழ்ச்சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி.யாக தமிழ்நாடு அரசு பதவி உயர்வு அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு அளித்துள்ளது தமிழக அரசு. ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகியோருக்கு ஐ.ஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரத்தில் பல் பிடுங்கிய வழக்கு.. ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 போலீசாருக்கு ஜாமீன் மேலும் 10 பேருக்கு டிஐஜியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி.மகேஷ்குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, *ஆர்.திருநாவுக்கரசு*, ஆர்.ஜெயந்தி, ஜி.ராமர் ஆகியோருக்கும் பதவி உயர்வு வழங்கியுள்ளது.

02/01/2024 மேலும் தொடர

நல்ல வார்த்தைகளை எதிர்பார்த்து ஏங்கும் உலகு

நல்ல வார்த்தைகளை எதிர்பார்த்து ஏங்கும் உலகு.

உற்சாகமூட்டும் நல்ல வார்த்தைகளுக்காக அனைவரும் ஏங்குகிரோம்.நல்ல வார்த்தைகளை எதிர்பார்த்து உலகம் ஓடுகிறது என சென்னை போலிஸ் நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசு பேசினார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் புத்தக பதிப்பாளர் சங்கம் சார்பாக மதுரை தமுக்கம் மைதானத்தில் 12 வது புத்தக திருவிழா நடக்கிறது. கருத்தரங்கில் புத்தக காட்சிக்குலு உறுப்பினர் சசிரேகா வரவேற்றார். சொல்லுக சொல்லில் பயனுடைய தலைப்பில் சென்னை போலிஸ் நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசு பேசியதாவது.

கண்டுபிடிப்புகளின் அற்புதம் புத்தகங்கள். பூங்காக்களில் நடந்தால் வாசம் பிறக்கும் புத்தகங்களில் நடந்தால் ஞானம் பிறக்கும். புத்தகம் வாசிப்பு என்பது நம் சுவாசம் மட்டுமின்றி நம் சந்ததியின் சுவாசத்தையும் சுத்தப்படுத்தும்.

புத்தகங்களை பரிசு அளித்தால் அறிவார்ந்த சமூகத்தை படைப்பவர் என உங்கள் மீது தனி முத்திரை பாதிக்கப்படும். அறிவார்ந்த மனிதர்களால் சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.

மனிதனின் அடையாளம் சிந்தனை, செயல், சொல் 1891 செப்டம்பர் 11ல் சிகாக்கோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் சகோதர சகோதரிகலே என பேச்சை தொடங்கி போது பலத்த கைத்தட்டலுடன் பாராட்டு கிடைத்தது. அதுபோல வார்த்தைகளை சரியாக பயன்படுத்தினால் உறவுகள் ஒட்டும் வெற்றியாளராக முடியும்.

குழந்தைகளை உற்சாகம் நேர்மை ஊக்கப்படுத்தி வளர்த்தால் தன்னம்பிக்கை, நீதிநெறி, பாராட்டும் குணத்தை கற்றுக்கொள்வர். அவநம்பிக்கை பகைமையுடன் வளர்த்ததால் குற்ற உணர்வு சண்டையிடும் குணத்துடன் வளர்வர்.

அனைத்து இடங்களிலும் உற்சாகமூட்டும் நல்ல வார்த்தைகளுக்காக குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஏங்குகிரோம். நல்ல வார்த்தைகளை எதிர்பார்த்து இந்த உலகம் ஓடுகிறது.

வார்த்தைகள் ஒரு மாபெரும் சக்தி சாதிக்க நினைப்பவர்கலுக்கு உங்களால் முடியும் என உற்சாகமூட்டுங்கல். கெட்ட எண்ணம் வரும் போது தவறான சொற்களை பயன்படுத்த கூடாது. ஒரு முறை பயன்படுத்திய சொற்களை நாம் திரும்ப பெற முடியாது. ஆகையால் நல்ல சொற்களை பேசுவோம் வாழ்வில் முன்னேற்றம் அடைவோம்.

10/09/2017 மேலும் தொடர

குடிகார போலிசாரும் அதிரடி IPS அதிகாரியும்.

குடிகார போலிசாரும் அதிரடி IPS அதிகாரியும்.

எல்லா துறைகளிலும் இருப்பது போலவே தமிழக காவல் துறையிலும் ஓயாத குடிகாரர்கள், முழு நேர குடிகாரார்கள் இருக்கிறார்கள். இவர்களால் காவல் துறைக்கு கெட்ட பெயர் அவர்களின் மனைவி மக்களுக்கு சொல்ல முடியாத துயரம்.

என்ன செய்யலாம்?

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி திருநாவுக்கரசு ஐ.பி.எஸ் யோசித்தார். இந்த திருநாவுக்கரசு சந்தன புயல் வீரப்பனை தேடும் பிரிவில் சிறப்பாக பணியாற்றியவர். இவருக்கு ஆக்சன் கிங், அதிரடி போன்ற பெயர்கள் மக்களால் வழங்கப்பட்டுள்ளது.

தனிப்பிரிவு காவலர்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள முழு நேர குடிகாரர்களை பட்டியலிட்டார்.

காவலர், கிரேடு2 காவலர், தலைமை காவலர், உதவி ஆய்வாளர்கள் என 30பேர் அந்த பட்டியலில் இருந்தனர்.

முழு நேர குடிகாரர்களை திருத்தும் நோக்கில் ஒரு மறுவாழ்வு மையத்தை 28.2.2016 அன்று நண்பகல் 1 மணி முதல் 2.30 மணி வரை கிருஷ்ணகிரி அலுவலக வளாகத்திலேயே அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுத்தார்.

கவுன்சிலிங் கொடுத்து முடித்ததும் அத்தனை பேரும் ஒரே கூட்டணியாக சேர்ந்து கொண்டு எஸ்.பி அலுவலகம் அருகில் உள்ள குத்தாரப்பள்ளி பகுதி டாஸ்மாக் உடன் இணைந்த பாரில் மூக்குமுட்ட குடித்தனர்.

நமக்கு மட்டும் எஸ்.பி அட்வைஸ் செய்கிறார். தனிப்பிரிவில் எவ்வளவோ பேர் முழு நேர குடிகாராங்கலா இருக்காங்க நமக்கு தெரியாததா என்று கமெண்ட் அடித்தார்கள்.

இவர்களது நடவடிக்கைகள் பேச்சுக்கள் அனைத்தும் அதிரடி போலிஸ் திருநாவுக்கரசு கவனத்திற்கு போகிறது.

முழு நேர குடிகாரர்கல் 30பேரையும் குடியில் இருந்து விடுவிக்க 21 நாளைக்கு கடுமையான பயிற்சி கொடுக்க திட்டம் போட்டார்.

பர்கூர் போலிஸ் சரகத்திர்கு உட்பட்ட மல்லப்பாடி கிராமத்தில் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து முழு நேர குடிகாரர்கள் 30 பேரையும் அங்கே அடைத்தார். 29.02.2016 அன்று முதல் 21 நாளும் அந்த வளாகத்தில் அவர்கள் மீளும் படியான மருந்து மாத்திரைகள் எக்ஸ்பெர்ட்டுகளின் ஆலோசனைகள் படி பயிற்சிகள் வழங்கப்பட்டது.

நல்ல உணவு, நல்ல ஓய்வு, நல்ல அறிவுரை அத்தோடு 21 நாடுகளுக்கும் ஆன் டூட்டி உடன் சம்பளம்.

இந்த 30 நபர்களின் குடும்பத்தார் பயிற்சி மையத்திற்கு வந்ததுதான் பார்க்க முடியும் பேச முடியும் அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் தான்.

2016 பிப்ரவரி 29 முதல் நடக்கும் இந்த குடிகாரர்களை திருத்தும் பயிற்சி முகாம் பற்றி அறிந்து. அந்த 30 போலிசாரின் மனைவி மக்கள் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். எஸ்.பி அதிரடி திருநாவுக்கரசை பாராட்டுகிறார்கள்.

இந்த மாதிரியான முயற்சியை தமிழ்நாடு முழுவதும் உள்ள எஸ்.பி க்கள் செய்தால் எப்படி இருக்கும். டி.ஜி.பி அவர்கள் அவசரமாக கவனிக்க வேண்டும் நல்ல காரியங்கள் பரவலாக நடக்க வேண்டும்.

05/03/2016 மேலும் தொடர

திருக்குறள் பிரியர்

திருக்குறள் பிரியர்: ஒருவர் 100 திருக்குறளை படித்து அதன்படி நடந்தாலே போதும் அவரை யாராலும் வீழ்த்த முடியாத நிலைக்கு முன்னேறுவார் என நம்பிக்கையுடன் கூறுகிறார் IPS அதிகாரி திருநாவுக்கரசு.

தேனி மாவட்டம் S.ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த இவர் படித்ததெல்லாம் அரசு பள்ளியில் தான், பள்ளி படிப்பை ரெங்கசமுத்திரம் பள்ளியிலும், மேல்நிலை படிப்பை ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முடித்தார். சோழவந்தான் திருவேடகம் பள்ளியில் இயற்பியல் பட்டமும் மதுரை காமராஜர் கல்லூரியில் MSC பட்டமும் முடித்து, தந்தை விரும்பியதால் சட்டப்படிப்பையும் முடித்து வைத்தார்.

படித்தது அறிவியல் என்றாலும் தமிழ் இலக்கியம் மீது ஈடுபாடு அதிகம். இளைஞர் நலத்துறை நடத்திய வினாடி வினா நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக சென்றவர். போட்டியாளர்களுக்கு தெரியாத கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்து அசத்தினார். இன்றைய மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லத்துரை உங்கள் அறிவை ஏன் போட்டி தேர்வுக்கு பயன்படுத்தகூடாது என்ற கேட்ட பிறகுதான் TNPSC Group 1 தேர்வுக்கு தயாரானார். 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற Group 1 தேர்வில் பங்கேற்ற அவர் போட்டியிட்ட முதல் தேர்விலேயே வெற்றி பெற்று அதே ஆண்டில் DSP ஆக பணி அமர்த்தப்பட்டார்.

வீரப்பன் தேடுதல் படலத்தில் 100 பேர் கொண்ட படைக்கு தலைவராகவும், 7 ஆண்டுகள் வனப்பகுதியில் சிறப்பு அதிவிரைப்படை பிரிவிலும் பணியாற்றிய இவருக்கு 2007 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் கையால் வீரதீர செயலுக்கான விருது கிடைத்தது. 2015 ஆம் ஆண்டு IPS அதிகாரியாக பதிவி உயர்வு பெற்றார்.

மேடைப்பேச்சாளர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். பள்ளி கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பணியில் சேர்ந்த நாள் முதல் 2000க்கும் மேற்பட்ட மேடைகளில் உரையாற்றி உள்ளார்.

2015ல் அவர் எழுதிய உன்னுள் யுத்தம் செய் என்ற புத்தகம் இளைஞர்கள் இடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது குறித்து அவர் கூறும் போது கேளிக்கைகளில் நேரத்தை வீனடித்து லட்சியப்பாதையில் இருந்து விலகும் மாணவர்கள் இளைஞர்களுக்காக எழுதப்பட்ட நூல் இது. திருக்குறலோடு தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக ஒரு குறள் ஒரு பொருள் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதி வருகிறேன் என்றார்.

தற்போது சென்னை நுண்ணறிவு பிரிவு ஆணையராக பணியாற்றி வரும் அவர், தினமும் காலை பணிக்கு வந்தவுடன் போலிசாரை அழைத்து அவர்களுக்கு தினமும் ஒரு திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்லி நடைமுறை வாழ்க்கையோடு கற்று கொடுக்கிறார்.

வாட்சப்பையும் விட்டு வைக்காமல் அதன் மூலமாகவும் திருக்குறளை பரப்பி வருகிறார். மாதந்தோறும் ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று குடும்பத்தோடு சென்று மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாக செய்து வருகிறார். தனிமனிதனாக 25,000 மரக்கன்றுகளையும், குழுக்களாக சேர்ந்து பல லட்சம் மரக்கன்றுகளும் நட்டு வைத்திருக்கிறார்.

வெளி மாநிலம், வெளி நாடு சென்றாலும் தமிழரின் மிகப்பெரிய அடையாளம் திருக்குறளும் திருவள்ளுவரும் தான். உலகமே போற்றும் பொக்கிசம் நம்மிடம் இருப்பதால் நாம் அதை காப்பது அவசியம். ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் 100 திருக்குறளையாவது படித்து நடந்தால் அவரை யாராலும் வீழ்த்த முடியாது என்கிறார் நம்பிக்கை பொங்க.

காக்கி சட்டைக்குள்ளும் கவிதை பேசும் மனம் இருக்கும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் இந்த திருக்குறள் பிரியர் திருநாவுக்கரசு.

23/06/2018 மேலும் தொடர

திருநாவுக்கரசு எனும் நான்

பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் என்பதால் சிறுவயதில் இருந்தே புத்தகம் படிப்பது, ஒழுக்கமான வாழ்க்கை முறை என ஒழுங்குமுறைக்குள் வளர்க்கப்பட்டவர் திருநாவுக்கரசு.

ஆரம்பத்தில் வேண்டாவெறுப்பாக புத்தகங்களை படிக்க ஆரம்பித்தார். படித்ததால் கிடைத்த தகவல்களை சக நண்பர்களிடம் பகிர்ந்து போது அவருக்கு கிடைத்த வரவேற்பு மேலும் பல புத்தகங்களை படிக்க தூண்டுடியது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தேனி ரெங்கநாதபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்த திருநாவுக்கரசு, கல்லூரிப் படிப்பை மதுரை சோழவந்தான் விவேகானந்தர் கல்லூரியில் படித்து இயற்பியல் பட்டத்தை பெற்றார், மதுரை காமராஜர் கல்லூரியில் MSC பட்டம் பெற்றார் பின்னர் சட்டக் கல்லூரியில் பயின்று பட்டமும் பெற்றார் அறிவியல் பாடத்தில் பயின்றாலும் தமிழ் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர் திருநாவுக்கரசு பாரதியார் பாரதிதாசன் கவிதைகள் மீதும் குறிப்பாக திருக்குறள் மீது தீராத பற்று கொண்டவர் நம் திருநாவுக்கரசு.

தமிழ் புத்தக வாசிப்பு தன்னைப் பெரிதும் உயர்த்தியது என்கிறார். இவர் எப்படி காவல் துறைக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு?
வினா வினாடி நிகழ்ச்சி ஒன்று தனது வாழ்க்கையை புரட்டிப் போட்டது அதன் காரணமாகவே நான் இன்று உங்கள் முன் காவல்துறை அதிகாரியாக அமர்ந்து உள்ளேன் என்றார்.

வினா வினாடி போட்டி ஒன்றில் பார்வையாளராக பங்கேற்ற திருநாவுக்கரசு அந்த போட்டியில் பங்கேற்றவர்களை விட பார்வையாளர்களாக இருந்த திருநாவுக்கரசு அநேக கேள்விகளுக்கு பதில் அளித்தார், அப்போது அங்கு உடன் இருந்த தனது நண்பர் ஒருவர் நீங்கள் ஏன் குரூப் தேர்வுக்கு முயற்சி செய்யக்கூடாது என்று கூறினார். இது அவரின் சிந்தனையைத் தூண்ட அடுத்த முயற்சியாக குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் பணியை அவர் தேர்வு செய்தார். அவர் எழுதிய முதல் குரூப் 1 தேர்விலேயே வெற்றியும் பெற்றார்.

ஒருவேளை அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் எனக்கு தெரிந்த கேள்வியாக இருக்கலாம். அதனால் அந்தத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் என்று கூற முடியாது என்றார்.
1999ல் திருப்பூரில் முதன்முறையாக DSP பணியமர்த்தப்பட்டார். 2013இல் மதுரை துணை ஆணையர் 2015இல் கிருஷ்ணகிரியில் துணை ஆணையராக பணியாற்றி சிறப்பித்தார்.

இடையில் 7 ஆண்டுகள் STF ஆக வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார், முறுக்கேறிய உடம்பு அங்கு ஈடுபட்ட பயிற்சியின் மூலமாக வந்திருக்கலாம்.

வால்டர் தேவாரம், நடராஜ், விஜயகுமார் கீழ் பணியாற்றிய திருநாவுக்கரசு இதன் பின்னர் பதவி உயர்வு பெற்றார் 2015ஆம் ஆண்டு IPS தகுதிக்கு தேர்வானார். DGP விஜயகுமாரின் வீரப்பன் வேட்டை புத்தக வெளியீட்டில், கவிதை மழையில் பாராட்டு வாசிக்க பெரிதும் புகழ்ந்து உள்ளார் திரு.விஜயகுமார்.

திருக்குறளை பெரிதும் நேசிக்கும் திருநாவுக்கரசு தான் துணை ஆணையராக இருந்த காலக்கட்டத்தில் காலையில் ஒரு திருக்குறளை சொல்லிவிட்டுத்தான் காவல் துறை அதிகாரிகளுக்கு பணி பிறப்பிப்பாராம். பல்வேறு பணிகள் காரணமாக மன உளைச்சலில் இருக்கும் போலீசார் சற்று மன நிம்மதியாக பணியை துவக்குவார்கள் என்றார்.

தற்போது ஒரு குறல் ஒரு பொருள் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். இதுதவிர ஆளுமை குறித்த கட்டுரைகள் எழுதுவது கருத்தரங்கம், பள்ளி கல்லூரி விழாக்களில் பேசுவது இவரது வழக்கமாகும். இளைஞர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக தன்னம்பிக்கை மட்டும் அல்ல எதிர்மறை எண்ணங்களையும் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உன்னுள் யுத்தம் செய் என்ற புத்தகத்தையும் எழுதி வருகிறார்.

காக்கி சட்டை அதிகாரிகள் கடுமையானவர்கள் என்பதை பொய்ப்பிக்கும் வண்ணம் இலக்கிய இதயத்துடனும், எழுத்தாளுமையுடனும் வலம் வருகிறார் திருநாவுக்கரசு. இத்தனை பணிகளையும் கடினமான காவல்துறை பணிகள் உடனேயே செய்து வருகிறார்.

திருநாவுக்கரசு சென்னைக்கு புதிதல்ல 2011 ல் தி.நகர் காவல் நிலையத்தில் துணை ஆணையராக பொறுப்பேற்ற சில காலத்தில் தி.நகர் சுற்றி செயல்படும் சூதாட்டம் கிளப்புகள், கேளிக்கை விடுதிகள் அனைத்தையும் ஒழித்தார். ஒரு நம்பர் லாட்டரி மையங்களையும் ஒழித்தார். இதனால் சிலரது கோபத்திற்கு ஆளானார். வேண்டுமென்றே வம்பிலுத்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டாலும் இன்றும் சென்னை மக்கள் மனதில் தீரமிக்க துணை ஆணையராக திருநாவுக்கரசு இருக்கிறார்.

நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையராக தனது பணியில் சிறந்து விளங்க வாழ்த்துகள் தெரிவிக்கலாம்.

20/06/2017 மேலும் தொடர

வார்த்தைகளே வாழ்வின் வரம்!

ஒரு நாள் மாலைப்பொழுதில் துறவி ஒருவர், ஒரு கிராமத்திற்கு வருகை தந்தார். அக்கிராமத்தினர் துறவியிடம், ""ஐயா! தாங்கள் இங்கு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. எங்கள் கிராமத்து பெரியவர் ஒருவர்  உடல் நலமின்றி இருக்கிறார். நீங்கள் முயற்சி செய்து அப்பெரியவரைக் காப்பாற்றுங்கள். அவர் மிகவும் நல்லவர்'' என்றழைத்தனர். துறவியும், ""அப்படியே ஆகட்டும்!'' என்று கூறி, அவ்விடம் சென்றார். அங்கு கூடியிருந்தவர்களிடம், ""பெரியவர் நலம்பெற நான் சொல்லும் மந்திரத்தை நீங்கள் அனைவரும் மனதார திருப்பிச் சொல்லுங்கள். அவரை நலமாக்க முடியும்''  என்றார். 

அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், ""ஐயா... அது எப்படி சாத்தியமாகும்? பெரியவரை நலமாக்க வேண்டும் என்றால் ஒரு நல்ல மருத்துவரை அழைத்து வாருங்கள்; அவருக்கு வைத்தியம் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு வெறும் வார்த்தைகளை எல்லாரும் உச்சரிப்பதால் அவருக்கு ஒன்றும் ஆகிவிடாது'' என்று "வெட்டென பேசேல்' என்ற ஓளவையாரின் ஆத்திச்சூடியினை மறந்து கோபமாகப் பேசினார். துறவி இளைஞனைப் பார்த்து, ""எனது வாழ்க்கையிலேயே மிகப் பெரிய முட்டாளை இன்று தான் பார்க்கிறேன்'' என்றார். இதைக் கேட்ட அந்த இளைஞனுக்கு கோபம் தலைக்கேறியது. அவர் துறவியைப் பார்த்துக் கோபமாக, ""நான் என்ன முட்டாளா! நீங்கள்தான் முட்டாள்'' என்று கூச்சலிட்டார். உடனே துறவி, ""நான் உன்னிடம் முட்டாள் என்ற வார்த்தையைத்தானே உச்சரித்தேன். அது உனக்குள் ஏன் கோபத்தை உருவாக்கியது? அப்படியென்றால் எதிர்மறை வார்த்தை உன்னைக் கோபப்படுத்தும் என்றால், நேர்மறை வார்த்தை ஏன் அவரை நலம் பெறச்செய்யாது'' என்றார்.

""இதுதான் வார்த்தைகளின் பலம்'' என்றார். எதிர்மறை வார்த்தைகள் ஒரு மனிதனைக் காயப்படுத்தும்.  ஆக்கப்பூர்வமான வார்த்தைகள் மனதிற்கு மருந்தாக அமையும். இளைஞன் வார்த்தையின் ஆற்றலை அறிந்தான். கோபத்தில் பேசுகின்ற சொற்கள் சுவற்றில் அடித்த ஆணிகள். நாம் ஆணிகளென்னும் வார்த்தைகளை திரும்பி எடுத்தாலும், சுவற்றினை ஆழமாய் காயப்படுத்திய ஓட்டைகளை எளிதில் சரிப்படுத்த முடிவதில்லை. நேர்மறையான வார்த்தைகளே, நேர்த்தியான மனிதர்களை உருவாக்குகிறது. 

சொல், மொழியின் வெளிப்பாடு மட்டுமல்ல, அது உள்ளத்தின் வெளிப்பாடு; சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல. அது அவர் வாழ்கின்ற வாழ்வின் அடையாளம். "உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாகும்' என்ற மகாகவி பாரதியின் வரிகளைப்போல் எந்த மனதில்  நல்ல எண்ணங்கள் விதையாகி வளர்கின்றதோ, அந்தச்செடியில் அழகிய பூக்களாய் வார்த்தைகள் மலரும். அது அனைவர் மனதையும் காந்தமாய் ஈர்க்கும். பண்போடு அழைத்து, இனிமையாகப் பேசுபவர்கள் சொல்கின்ற பணியினை வேகமாகச் செய்வதற்கு உலகமே காத்திருக்கும் என்பதை 

"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்'

என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.  

அன்போடு பேசினால் வார்த்தைகள் பூக்களாகும். விளைவு பேசுபவர்களின் கழுத்தில் அது மாலையாகும். கோபத்தில் கனன்று பேசும்போது வார்த்தைகள் அம்பாகும். அது தொடுத்தவர் மனதைப் புண்ணாக்கிவிட்டுத்தான் அடுத்தவர் மனதைக் காயப்படுத்தும். கோபத்திற்கு துணையாக வார்த்தை என்னும் கணையை கையில் எடுக்கும் மனிதன் சுற்றம் இழந்து, சொந்தமின்றி தனி மரமாவான். வீட்டில், பொது இடங்களில் பேசும்போதுகூட இறைவன் சன்னதியில் பேசுவதாக நினைத்துப் பேசுகின்றபோது, சொல்லுக்கும், மந்திரத்திற்கும் வேறுபாடு இல்லை. அவையில் பேசுகின்ற சொற்களை வீட்டில் கற்றுத்தரும் பெற்றோரின் குழந்தை அவையத்து முந்தியிருப்பர். 

வார்த்தைகள் வரமாவதும், சாபமாவதும் வழங்குபவரின் கையில் உள்ளது. மனிதத்தின் மனதினைச் சொற்களால் பிரதிபலித்த கண்ணாடி இலக்கியம் முல்லைப்பாட்டு. மன்னருடன் வீரர்கள் போருக்குச் சென்றிருந்தனர். அவர்களது பிரிவால் அவரது துணைவியர் வருந்தி  காத்திருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலை என்றும் போல் வந்தது. ஆனாலும் தலைவன் மட்டும் திரும்பி வரவில்லை. தலைவன் வரும் வழிபார்த்து தலைவி ஊருக்கு வெளியே இருந்த கோவிலின் அருகில் சென்று நின்றாள். "இன்றாவது இந்த பாதை தனது தலைவனை அழைத்து வருமா?' என்று  வழிமேல் விழி வைத்தாள். தனது தலைவன் வருவதைப் பற்றி யாராவது தகவல் சொல்வார்களா என எதிர்பார்த்திருந்தாள். இதனை "விரிச்சி கேட்டல்' என்கிறது இலக்கணம். அப்பொழுது ஒரு மாட்டிடையன் மாடுகளை மேய்த்து விட்டு வீடு திரும்பினான். மாடுகள் அவனைப் பின் தொடர்ந்தன. அப்போது கன்றுக்குட்டி ஒன்று அத்தலைவியைப்  போலவே அந்த கிராமத்து வாசலில் தனது தாய்ப் பசுக்காக ஏங்கி  நின்றது.  மாட்டிடையன் அந்த கன்றினைப் பார்த்து, ""இதோ உனது தாய்ப் பசு வருகிறது'' என்று சொல்லிவிட்டு, அக்கோயிலைக் கடந்தான். இதனைக் கேட்டதும், இடையன் தனக்காகச் சொல்லியதாக நினைத்தாள். அதனை இறைவனின் வரம் என நினைத்தாள். தன் தலைவன் வந்துவிடுவான் என்று தலைவி உள்ளம் மகிழ்ந்தாள். ஆறுதல் படுத்துகின்ற வார்த்தைகளால் ஆறாத புண்ணும் ஆறிவிடும். பாராட்டப்படுகின்ற வரிகளால் துள்ளாத மனமும் துள்ளி விளையாடும். 

வளம் வாய்ந்த வார்த்தைகளைப் பேசுபவர்களே பலம் வாய்ந்தவர்கள். பறவைகள் பறவைகளாகப் பிறந்து பறவைகளாக மடிகின்றன. விலங்குகளும் அப்படியே. மனிதன் மட்டுமே மனிதனாய் பிறந்து மனிதனாக வாழ முடியும். அவனைவிட கீழாய் விலங்காக மாற முடியும். வாழ்வில்  உன்னத நிலையை அடைந்து இறைநிலையை அடைய முடியும். இத்தகைய இயற்கை நியதியினைத் தனது சொல்வன்மையால் மாற்றியவர் அனுமன். இலங்கையில் சீதையின் இருப்பிடம் அறிந்து திரும்பி வந்தார். தான் கண்ட காட்சியை இராமனிடம் சொல்ல முற்பட்டபோது, "கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்' என்ற வரிகளில் சீதை உயிரோடு இருக்கிறாள்; கற்புடன் இருக்கிறாள்; அதைக் கண்ணால் பார்த்தேன் என்பதை ஒற்றை வரிகளில் சொல்லியதால் தான் அனுமன் "சொல்லின் செல்வன்' என இராமனின் மனதில் இடம் பிடித்தார். ஆதலால்தான் இன்றும் இறை மேடையில் இராமன், இலட்சுமணன், சீதாப் பிராட்டியோடு வானரர் இனத்தில் பிறந்த அனுமனும் இடம் பிடித்தார்.

வார்த்தைகள்  ஆற்றல் வாய்ந்தவை. யு கேன் ஹீல் யுவர்செல்ப் (வர்ன்  ஸ்ரீஹய் ஏங்ஹப் ஹ்ர்ன்ழ்ள்ங்ப்ச்) என்ற புத்தகத்தின் ஆசிரியரான கோலின், தனக்கு ஏற்பட்டிருந்த நோயைத் தன்னுடைய மனோசக்தியால் விரட்டியடித்தார். மனதின் பலத்தை தருகின்ற சொற்களை ஒரு கேரட்டை வைத்து தன்னுடைய புத்தகத்தில் விளக்கியுள்ளார். சில கேரட்டுகளை எடுத்து இரண்டு பாகங்களாகப் பிரித்து நட்டுவைத்தார். தொட்டியில் ஒரு +(கர்ஸ்ங்) வடிவத்தைக் குறியிட்டார். மற்றொரு தொட்டியில் -(ஏஹற்ங்)  வடிவத்தை குறியிட்டார். தினமும் (+) தொட்டிக்குத் தண்ணீர் ஊற்றி, ""உன்னை எனக்குப் பிடிக்கும், நீ நன்றாக வளர்வாய்'' என நேர்மைறையான எண்ணங்களால் அவற்றை வாழ்த்தினார். 

(-) குறியிட்ட தொட்டியில் தண்ணீர் ஊற்றி, "" நீ நன்றாக வளர மாட்டாய்! உன்னை எனக்குப் பிடிக்கவில்லை'' என்று எதிர்மறை வசைகளைப் பொழிந்தார். ஒரு வாரத்திற்கு பிறகு (+) தொட்டியில் இருந்த கேரட்டுகள் துளிர்விட்டிருந்தன. (-) தொட்டியில் இருந்த கேரட்டுகள் கருகியிருந்தன. நேர்மறை வார்த்தைகளில் உயிரை உருவாக்கும் சக்தி இருப்பதே இந்த ஆய்வின் உண்மை.  

பேசுவது மனிதம். பேசாமலிருப்பது தெய்வீகம்.  ""நாம் பேசுகின்ற வார்த்தைகள் உண்மையாக இருந்தாலும், அது பிறருக்குப் பயனுள்ளதாக இராவிட்டால், சிலரால் அது விரும்பப்படாவிட்டால்,  அதைப்  பேச வேண்டிய அவசியமில்லை'' என்கிறார் புத்தர். நாம் பேசுவது உண்மை என்று விரும்பியதைப் பேசினால், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விடும். சிந்திக்காமல் பேசுவது முட்டாள் தனம். சிந்தித்து பேசுவதே உத்தமம்.  

ஒரு  குருவிடம் பயின்ற சீடர்கள் விடைபெறும் காலம் வந்தது. அப்போது ஒரு சீடர், ""சுவாமி!   நாங்கள் எப்படி பேசவேண்டும் என்று  அறிவுரை கூறுங்கள்'' என்றார். ""நீங்கள் பேசுவதற்குமுன், நாம் பேசப்போவது உண்மைதானா? உண்மையென்றால் அது நாம் சொல்பவருக்கு தேவையானதா?  அதைக் கூறுவதால் கேட்பவருக்கு நன்மை பயக்குமா?  இறுதியில் இதை இனிமையாகச் சொல்ல முடியுமா? என்ற நான்கு கேள்விகளுக்கும் பதில் "ஆம்'  என்றால் பேசத் தொடங்குங்கள். இல்லையெனில் அமைதியாகவே இருந்து கொள்ளுங்கள்'' என்றார். ஒருமுறை பேசுவதற்கு முன்னால் இருமுறை யோசிப்பவர்களின் பேச்சுகள் வரலாறாகின்றன.

சிலரது பேச்சு மலைக்க வைக்கும். நம்மை வியக்க வைக்கும்.  பேச்சில் பண்பு வெளிப்படுவது போல், பேசும் விதத்தில் பாரம்பரியமே வெளிப்படும். அமெரிக்க நாட்டில் 1893 ஆம் வருடம் செப்டம்பர் 11- இல்  உலகத் தலைவர்களெல்லாம் அங்கிருப்பவர்களை ""சீமான்களே! சீமாட்டிகளே!'' என்றழைத்தபோது, சுவாமி விவேகானந்தர் மட்டும், தன் காந்தக் குரலால் ""எனதருமை அமெரிக்கச் சகோதர, சகோதரிகளே!'' என்று அழைத்தபோது தங்களை மறந்து அவர்கள் கைதட்டிய ஓசை விண்ணைப் பிளந்தது.  இந்திய தேசத்தின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் விவேகானந்தர் தனது மொழிகளால் அமெரிக்க மண்ணில் அன்று வித்திட்டார். இன்று ஆலமரமாய் நமது பெருமை உலகிற்கு வெளிப்படுகிறது.  

பேச்சு ஒரு கலை. இறைமை தந்த அற்புதப் பரிசு. அதைச் சிதறாமல் சிக்கனமாய் பயன்படுத்துபவருக்கே பாராட்டுகள் அதிகம் கிடைக்கும். "சொல்லின் சுருக்கம் அறிவின் உயிர்' என்பார் ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியர். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்ற அழைத்தனர். சர்ச்சில் அருக்கே உரிய பாணியில் தலையில் தொப்பி, கையில் ஊன்றுகோல், வாயில் சுருட்டோடு மேடையேறினார். கைதட்டல் அரங்கை அதிர வைத்தது. பிரசங்க மேடைக்கு வந்தார். எப்பொழுதும் போல அவர் எழுதி வைத்திருக்கும் குறிப்பினை மேடையின் பீடத்தில் வைப்பதற்குப் பதிலாக தனது தொப்பியை வைத்தார். மிகவும் உயர்ந்த தொனியில் ""எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்'' என்று சூளுரைத்துவிட்டு, தொப்பியை தலையில் வைத்துகொண்டு புறப்பட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக வரலாற்றில் மிகச்சிறிய உரை அது. ஆனாலும், இங்கிலாந்து மக்களின் உள்ளத்தில் இன்றும் வாழும் வார்த்தைகள்.   

இனியவை பேசினால் இன்பம் பெருகும்; பகைமை விலகும்; குடும்பம் உயரும்; சமூகம் சிறக்கும்; வாழ்வு மகிழும்; உறவுகள் விரியும். பேச்சு என்பது வாழும் வாழ்க்கையின் நெறிமுறை. இன்சுலின் சர்க்கரை நோயிலிருந்து காப்பதுபோல் இனிய சொல் பிரச்னைகளில் இருந்து காக்கும்.

அன்று சிறுவனுக்கு அவனது தாயின் மீது கோபம். கோபத்தோடு, ""நான் உன்னை வெறுக்கிறேன், நான் உன்னை வெறுக்கிறேன்''  என்று கத்தினான். அம்மாவின் பார்வையிலிருந்து ஓடிப்போய்,  அருகிலிருந்த மலை குகை வரை அந்த வார்த்தைகளை சத்தமாய் சொல்லிக் கொண்டே ஓடினான். 

அவனது குரல் அருகில் இருந்த குகையில் பட்டு எதிரொலித்தது. அந்த எதிரொலியும் "நான் உன்னை வெறுக்கிறேன்' என்று சத்தமாய் சொன்னது. மனிதச் சுவடுகளே இல்லாத ஒரு மாபெரும் சத்தத்தில் எதிரொலியைக் கேட்டதும் பயந்தே போனான் அந்தச் சிறுவன். 

தாயிடம் மீண்டும் ஓடி வந்தான். அவளது காலினை இறுகப்பிடித்துக்கொண்டு  நடந்ததைச் சொன்னான். அன்னைக்கு அது புரிந்திருந்தாலும், மகனுக்கு அதைத் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, அதே மலை குகைக்கு  அழைத்துச் சென்றார். ஒரே ஒரு நிபந்தனை. இம்முறை "நான் உன்னை விரும்புகிறேன்! நான் உன்னை விரும்புகிறேன்!'  என்று சத்தமாய் கத்தச் சொன்னார். அடுத்த வினாடியில் மொத்த பள்ளத்தாக்குமே எதிரொலித்து அவனை விரும்பியதைக் கண்டான். 

அன்னை ஆச்சரியமாக மகனிடம் சொன்னார்: ""நமது வாழ்க்கையும் இதுபோன்றதுதான். இந்த உலகத்திற்கு நாம் எத்தகைய வார்த்தைகளை கொடுக்கின்றோமோ, அத்தகைய வாழ்க்கையை நாம் உலகிலிருந்து பெறுவோம்''

எழுத்துகளின் தொகுப்பு வார்த்தை!
வார்த்தைகளின் தொகுப்பு வாழ்க்கை! 
வார்த்தைகளில் வரம்பு மீறினால் வாழ்க்கை சாபம்!
வார்த்தைகளைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கை  வரம்!!

30/10/2018 மேலும் தொடர

அன்பே அரண்!

தன்னிலை உயர்த்து! 15
ஒரு குருவும் அவரது சீடரும் குளக்கரையில் அமர்ந்திருந்தார்கள். சீடன் குருவிடம் அன்பினைப் பற்றி பல கேள்விகளைக் கேட்டார். குருவும் நிதானமாக பதில் அளித்தார். சீடன், ""குருவே... அன்பில் சுயநலமிக்க அன்பு, சுயநலமற்ற அன்பு என உண்டா?'' என்று கேட்டார். குருவும், சீடனுக்கு பதிலை விளக்க அவரை அழைத்து கொண்டு அருகிலே தூண்டிலோடு இருந்த இளைஞரிடம் சென்றார். அங்கே கூடையில் அவன் பிடித்து வைத்திருந்த மீன்கள் துடித்துக்கொண்டிருந்தன. குரு அந்த இளைஞனிடம், "தம்பி! மீன் உனக்கு பிடிக்குமா?'' என்றார். இளைஞனும் "ஆமாம் ஐயா... மீன் என்றால் எனக்கு உயிர். எனக்கு மிகவும் பிடிக்கும். பிடித்து வைத்த இந்த மீன்களை எல்லாம் நன்கு சமைத்து ருசித்து சாப்பிடப் போகிறேன்'' என்றார்.
அதே நேரத்தில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் குளக்கரைக்கு வந்தார். அவர் கையில் இருந்த பையில் மீன்கள் விரும்பி உண்ணும் பொரி இருந்தது. கையில் இருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் துள்ளிவந்து பொரியினை தங்களுக்கு இரையாக்கின. குரு அப்பெரியவரிடமும், "பெரியவரே! மீன் உங்களுக்கு பிடிக்குமா?'' என்றார். பெரியவரும், "ஆமாம் ஐயா... மீன் என்றால் எனக்கு உயிர்; அதனால் தான் தினமும் இங்கு வந்து மீன்களுக்கு உணவு அளிக்கிறேன்'' என்றார். 
இப்போது குரு சீடனிடம், ""பார்த்தாயா! இருவரும் மீன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள். அந்த இளைஞன் தனது பசியாற்ற மீன்கள் மீது அன்பு செலுத்துகிறான். அது சுயநலமிக்க அன்பு. ஆனால், இந்த பெரியவரோ, மீன்களின் பசியாற்ற வேண்டும் என்ற இரக்க உணர்வோடு உணவு அளிக்கிறார். இது சுயநலமற்ற அன்பு'' என்றார். அன்பானது மனதினில் உருவாகின்ற அற்புதமான உணர்வு. ஓர் ஆழமான உணர்வு.
சுயநலமில்லாத அன்புதான் இரக்கம். அது மனிதத்தில் உருவாகின்ற ஆழமான உணர்வு. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற மகான் வள்ளலாரின் உணர்வு; காற்றில் வளைந்து, நெளிந்து, ஒரு பிடிப்புக்காக ஏங்கிய முல்லைக்கொடிக்கு தான் சென்ற தேரினைக் கொடுக்கும் பாரியின் உணர்வு; தன் தோகை விரித்தாடும் ஆடும் மயிலினைக் கண்டு, தன்னைப்போல் குளிரில் நடுங்குகிறதோ என உள்ளம் சிலிர்த்து, தான் போர்த்தியிருந்த போர்வையைப் போர்த்தும் பேகனின் உணர்வு; துரத்தி வந்த பருந்திற்காக, தனது தொடையின் தசையினைத் தருகின்ற மன்னன் சிபியின் உணர்வு; இவை மனிதத்தின் புனிதமான உணர்வு. அன்பினில் உயர்ந்திருக்கின்ற மனிதனுக்கு, எதிரியென எவருமில்லை. உண்மையில் மனிதனின் எதிரி வெளியே இருப்பதில்லை. அவனுக்குள்ளேதான் இருக்கின்றான்.
நல்லவர்களுக்கு இரங்குவது இயற்கை. "பகைவனுக்கு அருள்வாய்! நன்னெஞ்சே! பகைவனுக்கு அருள்வாய்!' என்று எதிரிக்காக பிரார்த்திக்கும் மகாகவி பாரதி, அன்பின் மணிமகுடம். நமக்கு பகைவரே இல்லை. மனதில் பகைமையும் இல்லை என்ற அன்புள்ளம் கொண்ட மனிதருக்கு"யாதும் ஊரே; யாவரும் கேளீர்' தான். 
அமெரிக்காவினுடைய பதினாறாவது ஜனாதிபதியாக இருந்தவர் ஆப்ரகாம் லிங்கன். அவரை எதிர்த்து தேர்தலிலே எட்டு பேர் பேட்டியிட்டார்கள். அவர்கள் லிங்கன் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக பல கெடுதல்கள் செய்தார்கள். அத்தனையும் மீறி அவர் ஜெயித்துவிட்டார். அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்பதற்கு முன்பாக தனது தனிச் செயலாளரை அழைத்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டஎட்டு பேர்களின் முகவரியைப் பெற்றார். உடனே அவர்களின் வீட்டிற்குச் சென்று வாழ்த்துக்களைப் பெற்றுத் திரும்பினார் ஆப்ரகாம் லிங்கன்.
தனிச் செயலாளர் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் லிங்கனிடம், ""நீங்கள் இந்த நாட்டின் முதல் குடிமகன். உங்களுடைய அதிகாரத்தால் இவர்கள் அனைவரையும் ஒழித்துவிடலாமே. அதைவிட்டுவிட்டு அவர்களின் வீட்டிற்குச் சென்று ஏன் வாழ்த்தினைப் பெறுகிறீர்கள்?'' என்றார். அதற்கு ஆபிரகாம் லிங்கன், "அந்தக் காரியத்தை தான் இப்பொழுது நான் செய்து வந்தேன். பகைவர்களை பொறாமையால் அழிப்பதற்குப் பதிலாக அன்பினால் அவர்களது பகைமையை அழித்தேன்'' என்றார். "அன்பு பொறுமையானது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். அன்பு ஒருபோதும் அழியாது'' என்ற பைபிளின் வரிகளை வாழ்க்கையில் பிரதிபலித்தார் ஆபிரகாம் லிங்கன். 
"கருணையோடும் அன்போடும் செயல்பட்ட பெயரற்ற, நினைவற்ற செயல்கள் தான் ஒரு நல்லவனின் வாழ்வில் மிகச்சிறந்த பகுதி'' என்கிறார் இங்கிலாந்து நாட்டு கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ் வர்த்.
இரண்டு சாதுக்கள் வட இந்திய பனிமலைப் பாதையில் ஓர் ஆலயம் நோக்கி பயணித்தனர். திடீரென பனி மழை பெய்தது. பனியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கைகோர்த்து நடந்தனர். அவர்களது பயணத்தில் சாலை ஒரத்தில் ஒரு மனிதன் சாகும் தறுவாயில் இருந்தான். ஒரு சாது, தன்னுடன் வந்த சாதுவிடம், ""நாம் இருவரும் கைதாங்கலாக இவரை அழைத்துக்கொண்டு பக்கத்து கிராமத்திற்குச் சென்று விடலாம். அங்கு மருத்துவம் பார்த்து இவர் பிழைத்து கொள்ளட்டும்'' என்றார். "இல்லை... இல்லை... என் உடம்பெல்லாம் நடுங்குகிறது, பனியும் பொழிகிறது. கோயிலுக்குச் செல்ல நேரமாகிவிட்டது. நான் முன்னே செல்கிறேன்'' என்று சொல்லி அவர் பயணத்தைத் தொடர்ந்தார். 
"இந்த உலகில் நான் ஒருமுறைதான் வலம் வருவேன். எனவே யாருக்காவது அன்பை என்னால் காட்ட முடிந்தால், எந்த நன்மையாவது செய்ய முடிந்தால், நான் இப்போதே செய்து விடுகிறேன். அதைத் தள்ளிப் போடவோ, ஒதுக்கவோ மாட்டேன். ஏனெனில் இந்த வழியே நான் மறுபடியும் வரமுடியாமல் போகலாம்' என்ற பழமையான வரிகள் சாதுவின் மனதில் நிழலாட, சாது படுத்திருந்தவரிடம் சென்று அவர் கால்களிலும், கைகளிலும் தனது கைகளால் அழுத்தி தேய்த்தார். மெதுவாய் அந்த மனிதன் கண் திறந்தார். சாது தனது தோளிலே அவரைச் சுமந்தார். இருவரது உடலின் வெப்பமும் இருவரது இரத்த ஒட்டத்தை மெதுவாய் அதிகரிக்கச் செய்தது. பனியின் தாக்கம் குறைந்தது. 
ஒரு மைல் தூரம் கடந்த பின்பு அவ்வழியில் இன்னொருவர் படுத்திருந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அவர் முன்னால் சென்ற சாது எனத் தெரிந்தது. 
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு
என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப அச்சாது அன்பில்லாத வெற்றுடம்பாய் கிடந்தார்.
"தன்னலம் கொண்ட அன்பு தனித்துவிடப்பட்டது. சுமைகளைத் தாங்கும் அன்பிற்கு ஆற்றல் கூடியது. தன் சக மனிதர்களை நேசிப்பவனை உலகம் புகழ்கிறது'' என்றார் அரிஸ்டாட்டில். அன்பு அழகாகவே மனிதர்களைப் புரிந்து கொள்கிறது.
"அன்பும், சிவமும் இரண்டு'' என்பார் அறிவிலார், "அன்பே சிவம்' என்பதை அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பார் என்று உலகம் தேடும் உன்னத நிலையை அடைய நினைப்பவருக்கு 
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்...
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே 
என்று மனிதர்களிடம் "அன்பை பெருக்குங்கள், அன்பில்தான் இறைவன் வெளிப்படுவார்' என்கிறது திருமூலரின் திருமந்திரம்.
"இந்த உலகம் அன்பினால் மட்டுமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. அன்பில்லாத வாழ்க்கை பூவும், பழமும் இல்லாத மரத்தை போன்றது'' என்கிறார் கலீல் ஜிப்ரான். மனித மகிழ்ச்சிக்கு அன்புதான் அடிப்படை ஊற்று, பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும், சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும், கணவனுக்கும், மனைவிக்கும் இடையே உள்ள அன்புதான் மகிழ்ச்சிக்கு அடிப்படை.
மனிதர்கள் நேருக்கு நேர் சந்திக்கின்றபோது அவர்களின் நடை உடை பாவனைகள் மற்றவர்கள் மீது சில பாதிப்புகளை ஏற்படுத்தும். அது சில காலம் மட்டுமே நிற்கும். அவர்கள் காட்டுகின்ற அன்பு தான் நெடுங்காலம் கல்லில் செதுக்கிய சிற்பம் போல் அவர்கள் மனதில் அழகாய் நிலைபெறும். தியானிக்கின்றபொழுது மூளையில் உருவாகும் ஆல்பா அலைகள் மூளையினுடைய செயல்திறனைத் தூண்டுவது பிறர் மீது அன்பினை மலரச் செய்கிறது என்கிறது ஆராய்ச்சியின் முடிவுகள். 
ஒரு கிராமத்து மனிதன் நள்ளிரவில் சட்டென்று விழிந்தெழுந்தான். அவன் மிகவும் அன்பானவன். சக மனிதர்களை நேசிப்பவன். கடவுள் பக்தன். நிலவொளியில் அவன் கண்களில் ஒரு தேவதை பளிச்சிட்டாள். அவள் கையில் ஒரு தங்க புத்தகம். அவன் மெல்ல அருகில் சென்று, ""தேவதையே! இப்புத்தகத்தில் என்ன இருக்கிறது?'' என்று கேட்டார். 
"கடவுளை நேசிப்பவர்களின் பெயர்கள் இருக்கின்றன'' என்றது தேவதை. "எனது பெயர் இருக்கிறதா?'' என்று ஆவலாய்க் கேட்டான். புத்தகத்தை புரட்டி பார்த்துவிட்டு "இல்லை'' என்றது தேவதை. "இன்னொரு புத்தகம் கடவுளிடம் இருக்கிறது. அதில் உமது பெயர் இருக்கிறதா? என்று பார்ப்போம். அதை நாளை எடுத்து வருகிறேன்'' என்று சொல்லி பறந்தது தேவதை.
மறுநாள் விடியலுக்கு பதிலாக இரவுக்காக காத்திருந்தான். சொன்னபடியே தேவதை புதிய புத்தகத்தோடு வந்தது. "இதில் என் பெயர் இருக்கிறதா?'' என்றான். "இருக்கிறது, இப்புத்தகத்தில் உனது பெயர் மட்டும்தான் இருக்கிறது'' என்றது தேவதை. "அப்படியென்றால் இது என்ன புத்தகம்?'' என்றான். "இது கடவுளால் நேசிக்கப்படுபவர்களின் பெயர்களை கடவுளே எழுதி வைப்பது'' என்றது தேவதை. அன்பானவர்கள், கடவுளின் வடிவங்கள். காட்சியில் சாதாரணமானவர்கள், இயல்பானவர்கள், இயற்கையானவர்கள், இதமானவர்கள், நல்லவர்கள், பாசமிக்கவர்கள், தன்னலமற்றவர்கள், உண்மையாய் உழைப்பவர்கள், உலகை விரும்புபவர்கள், குடும்பத்தை நேசிப்பவர்கள், பணியில் புனிதமானவர்கள். மொத்தத்தில் மனிதத்தின் மாண்பானவர்கள். அவர்களின் கைகள், உதவி கரம் நீட்டும் ஏழ்மையின் வாய்க்கு உணவளிக்கும். அவர்களின் கால்கள் துயரப்படுபவர்களை நாடிச் செல்லும். அவரது கண்களில் துயரமானவர்களே தென்படுவார்கள். அவரது செவிகளில் துயரப்படுபவர்களின் ஓலங்களே கேட்கும். மொத்தத்தில் அவரது உடலும், உள்ளமும் இயலாதவர்களுக்காக மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கும். அவர்களது அன்பினில் இவ்வுலகம் நிலைக்கும். அவர்களது பெயரை இறைவன் உச்சரித்துக் கொண்டிருப்பார்.
அன்பு மனிதனை கடவுளிடம் சேர்க்கும்!
அன்பே மனிதனை கடவுளாக்கும்! 

23/10/2018 மேலும் தொடர

தன்னிலை உயர்த்து! - 14

கி.மு.490 ஆம்  ஆண்டு, அழகாக கட்டமைக்கப்பட்ட  நகரத்து வீதிகளைக் கொண்ட  பாடலிபுத்திரத்தின் ஒரு  வீதியில் வறுமையின் பிடியில் ஒரு சகோதரனும், சகோதரியும் இருந்தனர். சகோதரியின் கையில் ஒரு கைக்குழந்தை. அந்த சகோதரர், சகோதரியிடம், ""சகோதரி, நமது பசிப்பிணிக்கு ஒரு தீர்வு சொல்கிறேன். உனது கைக் குழந்தையை வசதியாக வாழும் ஒரு செல்வந்தரின் வீட்டில், அவர்களுக்கு தெரியாமல் வைத்துவிட்டு வந்துவிடு. இந்த அழகிய குழந்தையை வளர்ப்பதற்கு யாரும் தயங்க மாட்டார்கள். இதனால், உனது குழந்தையும் நல்ல இடத்தில் பசியின்றி வளரும். உன் பாரமும் குறையும்'' என்று யோசனை கூறினார். அதன்படி தனது குழந்தையை ஒரு செல்வந்தரின் பசு மாட்டுத் தொழுவத்தில் அழுகையுடன்  வைத்துவிட்டு வந்தார் அப்பெண். பசுக்களின் சொந்தக்காரர் அவ்வழகிய ஆண் குழந்தையை மகிழ்ச்சியோடு எடுத்து வளர்த்தார். பின்னர், சற்று பெரியவனானதும் ஒரு வேட்டுவனுக்கு அச்சிறுவனை விற்றார். அங்கு அச்சிறுவன் கால்நடைகளை மேய்த்து வந்தான். மாலை நேரத்தில் அச்சிறுவன், மற்ற சிறுவர்களுடன் விளையாடும் போது, தன்னை ஒரு மன்னனாகவும், மற்றவர்களை படைவீரர்களாகவும் பாவித்து விளையாடினான். ஒரு மணல் மேட்டை சிம்மாசனமாக மாற்றினான். செடி, கொடிகளால் தனது உடம்பில் அரச வேடம் பூண்டான்.  பிரச்னைகளோடு வருபவருக்கு நியாயம் வழங்கினான்.

" அலகிலா விளையாட்டுடையான் அவர்
தலைவர்;   அன்னவர்க்கே சரண் நாங்களே' 

என்று இராமனிடம் மற்ற குழந்தைகள் எல்லாம் சரண் அடைந்தது போல் அச்சிறுவனோடு விளையாடியவர்கள் அனைவரும் மெய்மறந்து அவனிடம் சரணடைந்திருந்தனர். 

ஒருநாள் அவ்வழியாக  ஓர் அந்தணர் வந்தார். அவர் தட்சசீலத்தைச் சேர்ந்தவர். விஷ்ணுகுப்தர் அவரது இயற்பெயர். சிறுவர்கள் விளையாடும் விளையாட்டினை ரசித்தார். அதில் மன்னர் வேடமிட்ட இளைஞனின் தலைமைப் பண்பினைக் கண்டு அதிசயித்தார். இவனுக்கு கற்றுக்கொடுத்தால் தலைமையின்றி தவிக்கின்ற பாஞ்சால மக்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பினார். அவ்விளைஞனுக்கு, ஏழு ஆண்டுகள் கல்வியும், போர்க்கலையும் கற்பித்தார். பின்னர் பாஞ்சால வீரர்களுக்கு படைத்தலைவனாக்கினார். ஒரு சிறந்த படைத் தலைவன் கிடைக்கவே, வீர பாஞ்சாலகாரர்களுக்கு உற்சாகம் பீறிட்டது.  திறமை வாய்ந்த அந்தப் போர்ப்படை,  நந்த மன்னரை வென்று, மகத சாம்ராஜ்யத்தையும் கைப்பற்றி, மெளரிய சாம்ராஜ்யத்தை நிறுவியது. மக்கள் அனைவரும் அத்தலைவனை விரும்பினர். இந்திய வரலாற்றில் கிழக்கே வங்கத்தில் இருந்து மேற்கே இந்துகுஷ் மலை வரையிலும், வடக்கே  இமயத்தில் இருந்து தெற்கே நர்மதை நதி வரையிலும் உள்ள பரந்த நிலப்பரப்பை ஆண்ட அந்த இளைஞன்தான் சந்திரகுப்த மெளரியர். திறமைகளைப் பாய்ச்சி, அவ்விளைஞனைத் தலைவனாக்கியவர் கெளடில்யர் என்ற சாணக்கியர். 

தலைமைப் பண்பு என்பது மண்ணிற்குள்ளே பொதிந்துள்ள நிலக்கரி போன்றது. அது சந்திரகுப்தனிடமிருந்தது போல் எல்லோரிடமும் பொதிந்துள்ளது. கெளடில்யரைப் போல், அறிவினாலும், ஆற்றலினாலும் பட்டை தீட்டும்போது  சாதாரண மனிதன் சாதிக்கும்  தலைவனாக உருவெடுகின்றார்.  

தலைமைப் பண்பு மனிதனின் தலையாய பண்பு. இது உண்மையினால் உருபெற்றெழுந்தால் உலகம் அழகு பெறும். ஓர் அரசனுக்கு வாரிசு இல்லை. அதனால், அவர் தனது நாட்டிற்கு ஒரு சிறந்த இளவரசனை தேர்ந்தெடுக்க திட்டமிட்டார். அந்த வாய்ப்பினை அந்த நாட்டு இளைஞர்களுக்கு முரசு கொட்டி அறிவித்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரண்மனை முன் திரண்டனர். அவர்களிடம், போட்டி ஒன்றினை மன்னர் அறிவித்தார். அனைவருக்கும் விதை ஒன்று வழங்கப்படும்.  அந்த விதையை யாரொருவர் மூன்று மாதத்தில் நன்கு வளர்த்து செடியாக்குகிறார்களோ அவர்தான் இந்த நாட்டின் இளவரசன் என்று அறிவித்தார். மூன்று மாதம் நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களும்  கைகளில் தொட்டிகளோடு வந்திருந்தனர். எல்லாருடைய தொட்டியிலும் வளர்ந்த செடிகள் இருந்தன. ஒரே ஓர் இளைஞனின் தொட்டியில் மட்டும் செடியே இல்லை. அவர்  நட்ட விதை முளைக்கவில்லை என்று கூறினார். அவரை மன்னர் மேடைக்கு அழைத்தார். எல்லோரும் அவரைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தார்கள். ஒரு விதையை வளர்க்கத் தெரியவில்லை என்பதை விட, அவனுக்கு பிழைக்கத் தெரியவில்லை என்ற அர்த்தம் அந்த சிரிப்பில் தெரிந்தது. மன்னர் அவரை அரியாசனத்தின் அருகே வரவழைத்து, ""இளைஞர்களே! இவர்தான் இந்த நாட்டின் எதிர்கால அரசன், இன்று நம் இளவரசர். ஏனென்றால், நான் உங்களிடம் கொடுத்தவை அவித்த விதைகள். அது எதுவுமே முளைக்காது. ஆனால் நீங்கள் எல்லாரும் விதை முளைக்கவில்லை என்று தெரிந்ததும், பதவிக்கு ஆசைப்பட்டு நேர்மையற்ற விதையினை நட்டு, அழகற்ற எண்ணங்களை செடியாக வளர்ந்து வந்துள்ளீர்கள். மனதில் உண்மையான, செயலில் நேர்மையான இவ்விளைஞனே நாட்டுக்கு தலைமை ஏற்க தகுதியானவர்'' என்றார்.

உண்மையான தலைமை என்றும் உயர்ந்து நிற்கும். தலைமை உண்மையின் உருவாய் இருக்கவேண்டும் என்கிறது மகாபாரதம்.

உண்மையில், தலைமை வேறு. தலைமைப் பண்பு வேறு. பொறுப்பிலும், நிர்வாகத்திலும் உயர்ந்த நிலையிலிருந்தால் அது தலைமை. ஒரு நல்ல பொது நோக்கத்திற்காக ஒரு குழுவை வழி நடத்தினால் அது தலைமைப் பண்பு. தலைமை தனது குழுவினை நிர்வகிக்கும். தலைமைப் பண்பு, குழுவினை நிர்வகிப்பதோடு, வழி நடத்தும். தலைமை தனது பணியினைச் செய்யும். தலைமைப் பண்பு தனித்தன்மையை வெளிக்காட்டும். ஓர் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்கும். புதுமை செய்யும்.

"ஜெனரல் ஸ்ட்ராங்' என்பவர், சிப்பாய் கலகத்தின் போது இந்தியாவில் இருந்தவர் ஒரு முறை சுவாமி, விவேகானந்தரை சந்தித்தார். சுவாமிஜி அவரிடம், ""சிப்பாய்களுடைய கட்டுப்பாட்டுக்குள்தான் ஆயுதங்கள், வெடிமருந்துகள் எல்லாம் இருக்கின்றன. அப்படியிருந்தும், இந்தியாவில் சிப்பாய் கலகம் ஏன் வெற்றியடையவில்லை?'' என்று கேட்டார். அதற்கு ஜெனரல்  ஸ்ட்ராங்,  ""சிப்பாய்கள் பலம் வாய்ந்தவர்கள். பயிற்சி பெற்றவர்கள். ஆனால் அவர்களின் பழக்கம் உத்தரவுக்கு கீழ்படிவது. அதனால், அவர்கள் போரினை முன்னெடுத்தபோது, அதன் தலைவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு, "வீரர்களே!  போரிடுங்கள்; முன்னேறுங்கள்' என கத்தினார்களே தவிர, அவர்களை முன் நடத்திச் செல்லவில்லை. போர் எனில் அதில் முன்னிற்பவர் போர்ப்படைத் தளபதி. அவர் இறப்பையும் எதிர்கொள்ளத் தயங்கமாட்டார். விழுப்புண் பெறுவதையே வீரமென்பார்.  அத்தகைய தலைமையில்லாததால் தான் சிப்பாய் கலகம் வெற்றிப் பெறவில்லை'' என்றார் ஜெனரல் ஸ்ட்ராங்.  தலைவர் என்பவர் ஆயிரம் வீரர்களோடு அவரும் ஒருவராக இருப்பினும், அவர்களுக்கு முன் நிற்பவர். முதன்மையானவர். அவரது சிந்தனையும், செயலும், வீரர்களிடமிருந்து வித்தியாசப்படும். அந்த வித்தியாசம்தான்  சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர், ""ஏன் நீங்கள் வித்தியாசமான மனிதராக தெரிகிறீர்கள்?'' என்ற கேள்விக்கு ""நீங்கள் எல்லோரும் ஏன் ஒரே மாதிரியாக காணப்படுகிறீர்கள்?'' என பதிலளிக்க வைத்தது.  தலைவர் வித்தியாசமாய் இருப்பவரல்லர். வியக்க வைப்பவர்.

1979-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் நாள் விண்ணில் ஏவப்பட்ட எஸ்.எல்.வி 3 என்னும் செயற்கைக்கோள் கடலில் விழுந்த போது சுக்கு நூறாகிப் போனது அதன் திட்ட இயக்குநர் அப்துல்கலாமின் இதயம். திட்ட இயக்குநரின் பதவி பறிக்கப்பட்டுவிடுமோ என்று கவலையோடு அனைவரும் இருந்தபோது, "கலாம், செயற்கைக்கோள் சுற்றுவட்ட பாதையில் தொடர்ந்து இருப்பார்' என்று அறிவித்தார் அதன் தலைவர். அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம், 18ஆம் நாள்,  ரோகிணி செயற்கைக்கோளை விண்ணிலே பிரகாசிக்க செய்தார் அப்துல் கலாம். அவ்வெற்றிக்காக அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் அழைத்துச்சென்று, அவர் அவையில் பேச வைத்தார் அதே தலைவர்.  ஜான் மெக்ஸ்வெல்லின் கூற்றுப்படி ஒரு சிறந்த தலைவர், கிடைக்கின்ற அழகான வெற்றியில் தனது பங்கிற்கும், குறைவான வெகுமதியைப் பெற்று, தோல்வி  வருகின்றபோது தனக்கு அதிக பங்கினை எடுத்துக்கொள்வார்கள் என்ற வரிகளுக்கு உயிராய் இருந்தார் பேராசிரியர் சதீஷ் தவான். அத்தகைய தலைமைதான் ஆற்றல் மிகு அப்துல் கலாம் என்னும் தலைமையை உருவாக்கியது. 

தனது ஞான அனுபவத்தின் மூலம் ஒரு சிறந்த தலைவனுக்கான ஒன்பது பண்புகளை பட்டியலிடுகிறார் டாக்டர் கலாம். ஒரு மாபெரும் இலட்சிய இலக்கோடும், இலட்சியத்தினை அடைவதே தனது வேட்கையாகவும், அதற்காக எவரும் பயணிக்காத பாதையில் பயணிக்கும் துணிவோடும், அதில் வெற்றியையும் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், துணிச்சலான முடிவுகள் எடுத்து, தலைமையின் புனிதத்தினை அறிந்து, வெளிப்படைத் தன்மையான செயல்பாடுகளோடு, பிரச்னைகளைத் தகர்த்தெறிந்து, நேர்மையாய்ப் பணி செய்து, உண்மையாய் வெற்றி பெறுபவரே ஒரு சிறந்த தலைவர் என்பதை தனது வாழ்வின் அக்னிச் சிறகுப் பயணத்தின் மூலம் அறிவிக்கிறார்.

ஒரு சிறந்த தலைமை சிதறுண்ட ஊழியர்களையெல்லாம் ஒன்று சேர்க்கும். புத்தம்புது சிந்தனைகளை அறிமுகப்படுத்தும். ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பிரச்சினைகளை அணுகும். அன்னையைக் கண்டதும் ஆவலாய் ஓடிவரும் குழந்தையின் ஆர்வத்தை பணியில் உருவாக்கும். ஒரு விளையாட்டு வீரரின் உற்சாகத்தை அனைவரின் உள்ளத்திலே பொங்கி எழச் செய்யும். முடியுமா என்ற கேள்வி இல்லாமல் "நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு மனதிலும் விதைக்கும். மொத்தத்தில், ஒரு சீரிய இலக்கினை செம்மையான வழியில் அடையச் செய்யும். 

தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய தகுதி வாய்ந்தவர்கள் கீழ்கண்ட பழமையான வாசகத்தை வழிமுறையாக்கிக் கொள்ள வேண்டும். "தலைவர்களே! மக்களிடம் செல்லுங்கள், அவர்களுடன் வாழுங்கள், அவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள், அவர்களை நேசியுங்கள், அவர்களுக்குத் தெரிந்தவற்றிலிருந்து தொடங்குங்கள், அவர்களிடம் இருப்பதை அடித்தளமாகக் கொண்டு கட்டி எழுப்புங்கள்.இதன் மூலம் தலைவர்களின் வழிகாட்டுதலில் மக்களால் அப்பணி நிறைவேற்றப்பட்டதும், பெருமையுடன் மக்கள் சொல்வார்கள் இதை நாங்கள் தான்  செய்தோமென்று. இவ்வரிகளை நிஜமாக்கிய அண்ணல் காந்தி, தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா போன்றவர்களின்  உயரிய தலைமை பண்பு, இச்சமூகத்தில் நமக்கு முன்னின்று, நமக்கு பாடம் புகட்டும் ஆல விருட்சங்கள்.

"இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்
 வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்
 நினையும் நீதி நெறி கடவான்' 

என்ற இராமாயணத்து வரிகளைப்போல்  ஒரு தலைவன் இனிமையாய்ப் பேசுபவராக,  கொடையாளியாக,  ஆராய்ந்து அறிந்து செயலில் இறங்குபவராக,  உடலோடு உள்ளமும் தூய்மையானவராக இலட்சியம் நிறைந்தவராக, எடுத்த காரியங்கள் யாவினும் வெற்றியடைபவராக நீதி நெறி வழுவாதவராக இருந்தால் அத்தலைவனுக்கு எவ்வித தீங்கும், அழிவும் என்றும் நேராது என்றார் கவிசக்கரவர்த்தி கம்பர்.

தலைமை தன்னிகரற்றது!

உண்மையான தலைமையே,  உன்னதமானது!

18/10/2018 மேலும் தொடர

முடிவு எடுத்தல்... ஒரு துணிவு!

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மாசிடோனியாவை ஆண்ட மன்னர் பிலிப். அவர் ஒரு நாள் குதிரையேற்றம் பார்க்கப் புறப்பட்டார்.  ""அப்பா, குதிரையேற்றம் என்றால் என்ன?'' என்றார் மகன். ""தெஸ்ஸாலி நாட்டை சேர்ந்த பியூசிபேலஸ் என்ற குதிரையை நம் வீரர்கள் அடக்கப் போகிறார்கள். அதுதான் குதிரையேற்றம்'' என்றார் தந்தை. ""நானும் தங்களுடன் கண்டிப்பாக வருவேன்'' என்று அடம்பிடித்த மகனை அழைத்துச் சென்றார் தந்தை. 

குதிரையை அடக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. எவராலும் அந்தக் குதிரையை அடக்க முடியவில்லை. நிகழ்சியை அந்தச் சிறுவன்  கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். மாசிடோனியாவில் துணிச்சலும், வீரமும் கொண்ட வீரர்கள் ஒருவர் கூட இல்லையா? என்று ஏளனம் பேசினான் குதிரைக்குச் சொந்தக்காரன். இதைக் கேட்டதும், சிறுவனின் வீர மனதில் ஓர் உறுத்தல். மன்னரின் மகனாயிருந்ததால், குதிரையில் ஏறிய அனுபவம் அவனை தூண்டியது. ""அப்பா, இந்த குதிரையை நான் அடக்குகிறேன். அதற்கு தங்களின் அனுமதி வேண்டும்'' என்றான். ""நீ சிறுவன், உன்னால் இந்தக் குதிரையை அடக்க முடியுமா?'' என்றார் தந்தை. ""என்னால் நிச்சயமாக முடியும்'' என்று சொல்லிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தான் சிறுவன். மகனின் துணிச்சலைக் கண்டு உள்ளூர மகிழ்ந்த தந்தை, ""சரி, களத்தில் இறங்கி குதிரையை அடக்கு. நீ இந்த குதிரையை அடக்கிவிட்டால், அதையே உனக்கு பரிசாக வாங்கித் தருகிறேன்'' என்று மகனை உற்சாகப்படுத்தி அனுப்பினார்.  

களமிறங்கியதும், குதிரையின் முகத்தை மெதுவாக தடவிக் கொடுத்தான். குதிரையை ஒருமுறை வலம் வந்தான். குதிரையை அது நின்று கொண்டிருந்த திசைக்கு எதிர்திசையில் திருப்பினான். குதிரை அமைதியாகவே நின்று கொண்டிருந்தது. இதையெல்லாம் மக்கள் கூட்டம் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தது. குதிரையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தபோதே, தடாலடியாக ஒரே தாவலில் குதிரையின் மீது ஏறி அமர்ந்தான். குதிரையின் சேணைக்கயிற்றை லாவகமாகப் பிடித்து, அதை விரட்டினான். சிறுவனுக்கு கட்டுப்பட்டு குதிரையும்  குதூகலமாக ஓடியது. கம்பீரமாக மைதானத்தை ஒரு முறை வலம் வந்தான். இதைப் பார்த்து மாசிடோனிய மக்கள் ஆரவாரத்தில் துள்ளிக் குதித்தனர். துணிச்சலான அந்த சிறுவனை தூக்கி வைத்துப் பாராட்டினர். தன் மகனின் துணிச்சலுக்கு பரிசாக "பியூசிபேலஸ்' என்ற அந்த குதிரையை  உடனே பரிசாக வாங்கிக் கொடுத்தார். 

""இந்தக் குதிரையை எப்படி அடக்கினாய்?'' என்று வியப்படைந்து கேட்டார் தந்தை. ""சூரிய ஒளியால் குதிரையின் கண்கள் கூசிக் கொண்டிருந்தன. அதனால்தான் குதிரை கோபத்தில் துள்ளிக் குதித்தது. அப்போது ஒரு முடிவெடுத்தேன். அதன்படி குதிரை நின்று கொண்டிருந்த திசையை மாற்றி நிற்க வைத்தேன். பின்னர் அதன் மீது ஏறினேன்'' என்றான் சிறுவன்.  இந்த துணிச்சலான முடிவை எடுத்த சிறுவன்தான் "எப்பொழுது நீங்கள் புதிய, தீர்க்கமான, உறுதியான முடிவெடுக்கிறீர்களோ, அப்பொழுது உங்கள் வாழ்க்கை மாற்றமடையும்' என்ற டோனி ராபின்ஸ் என்னும் அமெரிக்க எழுத்தாளரின் வரிகளுக்கேற்ப பின்னாளில் உலகம் போற்றும் மாவீரன் அலெக்ஸாண்டரானார்.

"வாழ்க்கை என்பது நிறைய வாய்ப்புகளைக் கொண்டது. அதில் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரது வாழ்வை நிர்ணயிக்கும்' என்ற ஜான் சி. மேக்ஸ்வெல் என்பவரின் வரிகளுக்கேற்ப  வாய்ப்பினை நழுவவிடுதலும், பிறருக்கு வழங்கிவிடுதலும் குரங்கு கையில் ரொட்டியைத் தந்த பூனைகள் போலாகிவிடும்.

பூனைகள் இரண்டு, ஒரு வீட்டிலிருந்து ரொட்டித் துண்டை எடுத்து வந்தன. அதை இரண்டாகப் பிரித்த போது ஒரு துண்டு பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் இருந்தது. இதில் பெரிய துண்டினை யார் வைத்துக்கொள்வது? என முடிவில்லாமல் இரண்டு பூனைகளும் சண்டையிட்டன. இப்பிரச்னைக்கு முடிவு காண, ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கு தீர்வு காண, முதலில் சற்று பெரிதான துண்டைக் கடித்து சாப்பிட்டது. இரண்டும் சரிசமமாக இல்லை. இப்போது  கடிபட்ட ரொட்டித்  துண்டு மற்ற ரொட்டித் துண்டை விட சிறியதாகி போனது. இதைச் சமப்படுத்த இரண்டாவது ரொட்டித் துண்டைக் கடித்தது. அது இப்போது முதல் ரொட்டித் துண்டை விட சிறியதாகி போனது.  மாறி மாறி சாப்பிட்டு கடைசியில் முழு ரொட்டியையும் குரங்கு சாப்பிட்டு  முடித்தது. இப்பொழுது இரண்டு பூனைகளும் ஏமாற்றத்துடன் சென்றன. முடிவுகள் நமக்கு கிடைத்த வாய்ப்பு. தான் எடுக்க வேண்டிய முடிவினை மற்றவர் இடத்தில் விட்டுவிடுபவர் வாழ்க்கை முழுவதும் ஏமாற்றத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பார். 

"நமது எதிர்காலம் ஆச்சரியங்கள் நிறைந்தது. எனவே, நடக்க இருக்கும் நிகழ்வுகளை சரி வர உள்வாங்கி பொருத்தமான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்கள், விழி இழந்தவர்கள் யானையை அடையாளங் கண்டதற்கு ஒப்பானதாகும்' என்கிறார் மேலாண்மையியல் பேராசிரியர் ஆலன் ரோவ். 

முடிவெடுப்பது ஒரு கலை. அது ஓர் அசாத்தியமான பண்பு. முடிவெடுக்காத வாழ்க்கை இயங்குவதில்லை. முடிவெடுப்பதில் மட்டுமே வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்  அழகாகவும், வேகமாகவும் இயங்குகிறது. அதிகாலை எழுவது முதல் அன்றிரவு தூங்கும் வரை, ஒருவர் எடுக்கும் முடிவு தான் அவரை நிர்ணயிக்கிறது. விரைவாக முடிவெடுத்து பழகுகின்றவருக்கு, இந்த உலகம் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. தோல்வியாளர்கள் அன்றைய சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கிறார்கள். வெற்றியாளர்கள் தாங்கள் அடைய வேண்டிய இலட்சியத்திற்காக முடிவெடுக்கிறார்கள்.

1893ஆம் ஆண்டு மே மாதம், ஒரு வழக்கு தொடர்பாக, தென்ஆப்பிரிக்காவில் உள்ள டர்பனிலிருந்து  பிரிட்டோரியாவுக்கு புறப்பட்டார் காந்தி. இரயிலில் முதல் வகுப்பில் பயணிப்பதற்கான பயணச் சீட்டை வைத்திருந்தார். இரவு ஒன்பது மணியளவில் அவர் சென்ற இரயில்  மாரிட்ஸ்பர்க் என்னு நகரினை அடைந்தது. அப்போது இரயிலில் வந்த பரிசோதனை அதிகாரி, காந்தியை பொருட்கள் ஏற்றி வரும் இரயில் பெட்டிக்கு போகச் சொன்னார். அதற்கு காந்தி ""என்னிடம் முதல் வகுப்பு பயணச் சீட்டு உள்ளதே'' என்றார். ஆனாலும் நிறவெறியில் ஊறிப்போன ஒரு வெள்ளையன் அவரை தன்னுடன் பயணிக்கக் கூடாது எனக் கூறியதால் அதிகாரி மிகவும் பிடிவாதமாய் இருந்தார். காந்தி மறுக்கவே, ஒரு போலீஸ்காரரை அழைத்து காந்தியை அவரது  பெட்டிகளோடு இரயில் பெட்டியிலிருந்து தூக்கி எறிந்தார். தூக்கியெறியப்பட்ட வேதனை ஒரு பக்கம். கடுங்குளிர் மறுபக்கம். இரயிலும் புறப்பட்டுப் போனது. ஊர் புதிது. நள்ளிரவு. துணையென்று எவருமில்லை. அடுத்து என்ன செய்வது? என சிந்தித்தார். வெள்ளையனிடம் பெற்ற அவமானத்தோடு இந்தியாவிற்கு திரும்புவதா? அல்லது நிறவெறிக்கு எதிராக போராடுவதா? என நெடுநேரம் யோசித்தார்.அதே இரவில் விடியலாக துணிந்து ஒரு முடிவெடுத்தார். ஆம்! போராடுவது என முடிவு எடுத்தார். அடுத்த தொடர் வண்டியில் பிரிட்டோரியாவுக்கு முன்னேறினார்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப அன்று துணிவாக எடுத்த முடிவினால்தான் இரயில் பெட்டியிலிருந்து தூக்கி எறிந்த வெள்ளையரை, நம் மகாத்மாவால்  இந்திய மண்ணிலிருந்து  தூக்கி எறிய முடிந்தது.

ஒவ்வொரு செயலுக்கும் கிரிக்கெட் பந்தினைப் போல இரண்டு விளைவுகள் இருக்கும். ஒன்று ஆட்டக்காரரை தோற்கச் செய்யும் , அல்லது ரன் எடுக்க உதவும். பந்து வீச்சாளரின் கையிலிருந்து ஆட்டக்காரர் அதை தடுத்தாட எடுக்கும் நேரம் தோராயமாக ஒரு விநாடிக்கும் குறைந்த நேரம் ஆகும். இக்குறுகிய  நேரத்தில் அப்பந்தினை  சரியாக கணித்து ஆடினால், ஒரு ரன் முதல் ஆறு ரன் வரை எடுக்க முடியும். கணிக்கத் தவறினால் ஆவுட் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. கிரிக்கெட் விளையாட்டினை உலகம் ஆர்வத்தோடு பார்க்கின்றது.  காரணம், பிரச்னை என்னும் ஒரு பந்து ஒரு மனிதனை நோக்கி வருகின்றது. அந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத அளவிற்கு பதினோரு பேர் சுற்றி இருக்கிறார்கள். இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையில் ஒருவர் அதை எப்படி கையாள்கிறார்? என்பதையும், ஒவ்வொரு, பந்துக்கும் அவர் எடுக்கின்ற முடிவுகளால் ஏற்படும் விளைவை  அறிந்து கொள்வதற்குத்தான் அவ்வரங்கத்தில் பத்தாயிரம் பேர்களும், பெரிய திரைகளில் லட்சக்கணக்கிலும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு பந்தினைப்போல், ஒவ்வொரு செயலுக்கும் சரியாக முடிவெடுப்பவரே ஆட்ட நாயகனாவதைப் போல் உலக நாயகனாகின்றார்.  

1917இல் ரஷ்யப் புரட்சியின் வெற்றியடைந்தது. தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, தொழிற்சாலையையே நிர்வாகம் செய்யும் பொறுப்பு தரப்பட்டது. தொழிலாளர்களே முதலாளிகளானார்கள். ஆனால் அவர்கள் மாமேதை லெனினிடம் எங்களுக்கு நிர்வாகம் செய்வதில் முன் அனுபவம் இல்லை என முறையிட்டனர்.  அப்போது லெனின், "நல்ல முடிவுகள் அனுபவத்தால் வரும்; அனுபவங்கள் சரியில்லாத  முடிவுகளால் கிடைக்கும்' என்பதை அறிந்து  ""தெரியாததை தெரிந்து கொள்வோம்; தவறுகளைத் திருத்திக் கொள்வோம்'' என்று அவர்களுக்கு கூறினார். அதன்படி தொழிலாளிகள் முடிவெடுக்கத் தொடங்கினர். சிறந்த முதலாளிகளானார்கள். ஒரு மலைப்பாங்கான கிராமம். தவத்தில் சிறந்த ஞானி ஒருவர் வருகை தந்தார். ஞான திருஷ்டியின் மகிமையால் அவரைக் காண வந்த ஒவ்வொருவருக்கும், பின்னாளில் நடக்கவிருப்பதைத் தெரிவித்தார். அனைவரும் அதைக் கேட்டு மகிழ்ந்தனர். இதனையறிந்த அந்த கிராமத்து சிறுவன் ஒருவன் முனிவர் முன் வந்து நின்றான். அவனது வலது கை மட்டும் மூடி இருந்தது. ""சுவாமி! எனது  கையில் என்ன இருக்கிறது?'' என்று சிறுவன் கேட்டான். அச்சிறுவனிடம், ""குழந்தாய்!  உனது கையில் ஓர் உயிர் இருக்கிறது'' என்று கண்ணை மூடியவாரே கூறினார் முனிவர். சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம், அவன் கைக்குள் இருந்த சிறு புழுவினை எப்படி முனிவர் கண்டுபிடித்தார்? என ஆச்சரியப்பட்டான். மீண்டும் முனிவரிடம், ""அந்த புழு உயிருடன் இருக்கிறதா? இறந்துவிட்டதா?'' என கேட்டான். ஒரு கணம் யோசித்துவிட்டு "அது உன் கையில் தான் இருக்கிறது என்றார் முனிவர். கூடியிருந்தவர்கள் எல்லாம் குழப்பத்தோடு முனிவரைப் பார்த்தனர். ""ஏன் சுவாமி! ஒன்று உயிரோடு இருக்கிறது என்று சொல்லுங்கள், இல்லையெனில் உயிரில்லை என்று சொல்லுங்கள். ஏன் பொதுவான பதிலைச் சொல்கிறீர்கள்?'' என்றனர். அதற்கு முனிவர்,  ""ஐயன்மீர்! நான் அச்சிறுவனின் கையில் இருக்கின்ற புழுவினை, உயிரோடு இருக்கிறது என்று சொன்னால், அவன் அப்புழுவை தனது கைக்குள்ளே நசுக்கி உயிரற்றதாக்கிவிடுவான். அப்போது என் வாக்கு பொய்யாகிவிடும். அதே நேரத்தில் அது உயிரற்றதாக இருக்கிறது என்று சொன்னால், அப்புழுவினை நசுக்காமல் அப்படியே  உயிரோடு என்னிடம் காட்டியிருப்பான். அதனால் தான் அந்த புழுவின் வாழ்க்கை உன்னிடம் இருக்கிறது என கூறினேன்'' என்றார். கண்ணுக்கெதிரே உள்ள செயல்பாடு புதிராக இருந்தால், புத்திசாலித்தனமே சரியான முடிவெடுக்கும். முடிவெடுப்பதை தள்ளிப் போடுபவர்கள் தோல்விக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவ்வப்போது முடிவெடுப்பவர்கள் வாழ்க்கையில் சாதாரணமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அடிக்கடி முடிவெடுப்பவர்கள் சிறந்த மனிதர்கள். விரைவில் நல்ல முடிவுகளை எடுப்பவர்கள் வாழ்வின் இலட்சியவாதி. எல்லா முடிவுகளும் நல்ல சிந்தனையாலும் சமூகத்தினுடைய வளர்ச்சிக்காகவும் இருக்கின்றபோது அந்த முடிவு வரலாற்றில் தடம் பதிக்கின்றது.

மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு முன்னர், பாண்டவர்களும் கெüரவர்களும் ஆயத்தமானர்கள். துரியோதனன் தனது நட்பு நாட்டு மன்னர்களுக்கெல்லாம் தூது அனுப்பி தனது படையை வலிமையாக்கினார். பாண்டவர்களும் தங்களது படையைப் பெருக்கினார்கள். இரு சாரரும் பகவான் கிருஷ்ணரின் துணையை நாடவேண்டும் என தீர்மானித்தனர். துரியோதனனும், அர்ச்சுனனும் துவாரகையிலிருந்த கண்ணனைப் பார்க்க வந்தனர். கண்ணன் கண்களை மூடி படுத்திருந்தார். துரியோதனன் கண்ணன் தலையருகே இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். அர்ச்சுனன் கண்ணன் காலருகே இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். கண்ணன் கண்விழித்ததும், இருவரிடமும் வந்த நோக்கத்தைக் கேட்டார். இருவரும் பாரதப் போரில் கண்ணனின் உதவி தேவை என்றனர். 

அதற்கு கண்ணன், ""நீங்கள் இருவருமே வேண்டியவர்கள்தான். ஆகையால் எனது படைவீரர்கள்  அனைவரையும் தரட்டுமா? அல்லது நான் ஒருவனே துணையாக வரட்டுமா? நான் போரில் ஆயுதத்தை கையில் தொடமாட்டேன். இந்த இரு துணையில் எது வேண்டும்?'' என்று முதல் வாய்ப்பாக துரியோதனிடம் கேட்டார்.  ""கண்ணா!  உன் படைவீரர்கள் அனைவரையும் தந்தால் போதுமானது'' என்றார் துரியோதனன்.  ""பரந்தாமா!  நீ எங்களுக்கு துணையாக இருந்தாலே போதும். உன் துணையிருந்தால்  நாங்கள் வெற்றிபெறுவது உறுதி. எங்கே துரியோதனன் தங்களை துணையாக கேட்டுவிடுவானோ என்று அஞ்சினேன். நல்லவேளை அவன் உன்னை கேட்காமல், உனது படையை மட்டும் கேட்டான்'' என்றார் அர்ச்சுனன். 

வெறும் எண்ணிக்கையை மட்டும் தேர்வு செய்ததால் துரியோதனன் மகாபாரத போரில் தோற்றான். சரியான தேர்வினைச் செய்யாவிட்டால் எத்தனை துணையிருந்தும் தோல்வியடைவார்கள் என்பதற்கு துரியோதனன் ஓர் எடுத்துக்காட்டு.      

முடிவெடுத்தல், ஒரு துணிவு! சிறந்த முடிவே,  வரலாறு!

03/10/2018 மேலும் தொடர

நன்றி... ஓர் அழகான வீரம்!

தன்னிலை உயர்த்து! 10

ஒரு மன்னர் பத்து வெறி  நாய்களை வளர்த்து வந்தார். அவரது அமைச்சர்கள் யாராவது தவறு செய்தால் அந்நாய்களால் அவர்களைக் கடிக்கச் செய்து கொடுமைப்படுத்துவார். ஒருநாள் அரசவையில் அமைச்சர் ஒருவர் வெளிப்படுத்திய கருத்தினை மன்னரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன்னருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. காவலாளியை அழைத்து, "'இவரை நாய்களுக்கு இரையாக்கு'' என்று கட்டளையிட்டார். ""மன்னரே! நான் தங்களிடம் பத்து வருடம் பணி செய்துள்ளேன்; என்னை ஒருமுறை மன்னித்து விடுங்கள்'' என்று வேண்டினார். மன்னர் மனம் இரங்கவில்லை. ""அப்படியானால், இத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன், பத்து நாட்கள் அவகாசம் வேண்டும்'' என்றார் அமைச்சர். மன்னரும் சம்மதித்தார்.

அமைச்சர் நாய்களின் காப்பாளரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கு அவரே நாய்களுக்கு உணவு அளிக்க விரும்புவதாகக் கூறினார். காப்பாளரும் சம்மதித்தார். அமைச்சர் நாய்களுக்கு உணவளித்ததோடு, அவற்றை  நன்கு பராமரித்தார். பத்து நாட்கள் கழிந்தன. அரசரின் ஆணைப்படி, அமைச்சர் நாய்களின் கூண்டுக்குள் இரையாக விடப்பட்டார். நாய்கள் அவரைக் கடித்து குதறுவதற்கு பதிலாக, அவரை அன்பாய் முத்தமிட்டன. மன்னர் ஆச்சரியமடைந்தார். 

அமைச்சர், ""மன்னா! நான் இந்நாய்களுக்காக வெறும் பத்து நாட்கள் மட்டுமே வேலை செய்தேன். அதற்கே ஆழ்ந்த நன்றி உணர்வை அவை வெளிப்படுத்துகின்றன. ஆனால், தங்களுக்கு பத்து வருடங்கள் சேவை செய்த போதிலும், ஒரு சிறு தவறுக்கு பெரிய தண்டனைக் கொடுக்கிறீர்களே?'' என்றார். மன்னர் தனது தவறை உணர்ந்து, அமைச்சரை விடுதலை செய்தார். நிறைகளைப் பார்க்கத் தெரியாமல், குறைகளை மட்டுமே பார்த்தால் தண்டிக்கத் தோன்றும். குறைகளைத் கடந்து, நிறைகளை பார்க்கும் போது மட்டும்தான் நன்றி உணர்வு வெளிப்படும். உண்மையில் நன்றி என்பது ஒரு மனப்பான்மை அல்ல, ஒரு செயலும் அல்ல, அது மனதில் இருந்து நிரம்பி வழிகின்ற ஒருவித உணர்வு.

எதிர்பார்த்தது கிடைத்தாலோ அல்லது தனக்குச் சாதகமாக அமைந்தாலோ மட்டுமே அன்பை வெளிப்படுத்துவது நன்றியாகாது. தனக்குக் கிடைக்கின்ற அனைத்திற்கும் நன்றியுடையவனாக இருப்பதுதான் உண்மையான நன்றியுணர்வு. 

ஒரு துறவி, தனது சீடர்களோடு பயணம் செய்தார். அன்றையப் பயணத்தின் முடிவில் தண்ணீரும் கிடைக்கவில்லை, உணவும் கிடைக்கவில்லை, இரவு தங்குவதற்கு ஒரு கிராமமும் தென்படவில்லை. கடைசியில் ஒரு வறண்ட பகுதியிலேயே தங்க நேர்ந்தது. சீடர்கள் அனைவரும் பசியோடும், தாகத்தோடும் மிகுந்த வருத்தத்தோடு உறங்கச் சென்றனர். துறவி மட்டும் எப்போதும்போல் இறைவனுக்கு ஆத்மார்த்தமாக நன்றி கூறினார். கோபத்துடன் எழுந்த ஒரு சீடர், ""குருவே! இன்று கடவுள் நமக்கு ஒரு உதவியும் செய்யவில்லை. துன்பத்தை மட்டுமே தந்தார். அவருக்கு ஏன் நன்றி செலுத்துகிறீர்கள்?'' என்றார். அதற்கு, புன்முறுவலோடு ""இன்று கடவுள் நமக்கு பசியையும், தாகத்தையும், நட்சத்திரங்கள் மின்னும் அழகிய கூடாரத்தையும் நமக்கு பரிசாகத் தந்துள்ளார். இதற்காக நான் நன்றி செலுத்துகிறேன்'' என்றார். இரவுகளின் உறக்கத்தின் முன்னால், இயல்பாய் அமர்ந்து இந்த நாளினைத் தந்திட்ட இயற்கைக்கு நன்றி சொல்லும் மனிதன், அன்பின் அடையாளம். அவர், இயற்கையின் பெரும் பரிசு. பிறப்பிலிருந்து துடிக்கின்ற இதயம் முதல், நம் இறப்பில் துடிக்கின்ற இதயங்களுக்கெல்லாம் நாம் நன்றிக் கடன்பட்டவர்கள்.  

இத்துறவி, ""ஒவ்வொரு நாளின் முடிவில் மிகுந்த விழிப்புணர்வோடு நன்றி செலுத்த வேண்டும். இன்று நம்மால் நிறைய கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், குறைவாக கற்றுக் கொண்டதற்காக; குறைவாகக் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருந்ததற்காக; உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் இறந்து போகாமல் இருப்பதற்காக, நாம் அனைவரும் நன்றி செலுத்துவோம்'' என்ற புத்தரின்  வரிகளுக்கு இலக்கணமாகிறார். அப்படியென்றால், வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடத்திற்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

தமக்கு கிடைத்ததைவிட, கிடைக்காமலிருப்பதற்காகவும் நன்றி  சொல்கின்ற மனதே உன்னத மனமாகும்.  ஓர் அழகான ஆங்கிலப் பாடல் உண்டு.  

"என்னிடம் இல்லாதவற்றுக்காக நன்றி, அவை தான் என்னைப் முழுமையாக்க ஊக்குவிக்கின்றன.   எனது குறைவான அறிவுக்காக நன்றி. அது தான் என்னைக் கற்றுக்கொள்ள தூண்டுகிறது. எனது கடினமான நேரங்களுக்காக நன்றி. அவை தான் என்னை வலிமையானவனாக மாற்றுகின்றன.  எனது குறைகளுக்காக நன்றி. அவை தான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.   எனது பிழைகளுக்கு நன்றி. அவை தான் எனக்கு அனுபவப் பாடத்தை அள்ளித் தருகின்றன.  எனது சோர்வுக்கு நன்றி. அது தான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகின்றது. எனது சோதனைகளுக்கு நன்றி. அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன‘ என்ற அப்பாடல் வரிகளின் ஆழ்ந்த சிந்தனையானது, நன்றியடைய ஒரு மனிதனைச் சோதிப்பவையெல்லாம், அவரைச் சாதிக்க வைக்கும்; சரித்திரம் படைக்க வைக்கும் என்பதை நமக்கு விளக்குகிறது.

வடகரோலினா பல்கலைக் கழக உளவியல் அறிஞர் சாரா அல்கோ. அவர், "கண்டுபிடி,  ஞாபகப்படுத்து,  சேர்' என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நன்றியுணர்வை ஆராய்ந்தார். முடிவில், நன்றியுணர்வு புதிய சமூக உறவுகளை உருவாக்கும், உறவினர்கள் உடனான  உறவை மேம்படுத்தும் மற்றும் உறவுகளைப் பராமரித்து பிற்காலத்தில் பயனுடையதாக்கும் என்று கண்டறிந்தார். நன்றியுணர்வு, உறவுகளைப் பலப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் ஆணித்தரமானது. அது மட்டுமல்லாது நன்றியுணர்வு மனதைச் சமநிலைப்படுத்துகிறது, தெளிவாக சிந்திக்கத் தூண்டுகிறது, இன்னல்களை நிதானமாய் அணுக வைக்கிறது, அன்பை வளர்க்கிறது, ஆற்றலைப் பன்மடங்காக்குகிறது. மொத்தத்தில் மனிதனைப் புனிதனாக்குகிறது. 

கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் வாழ்ந்த தத்துவஞானி மார்க்கஸ் டுல்லியஸ் சீசரோ, ""நன்றி உணர்வு என்பது உயர்ந்த நற்குணம் மட்டுமல்ல, அது அனைத்து நற்குணங்களுக்கும் பெற்றோர்'' என்றார். மனித உணர்வுகளிலே உயரிய உணர்வு நன்றி உணர்வு. நன்றியினை செலுத்தும்பொழுது அது அன்பாக, பேரின்பமாக, அமைதியின் வடிவமாகப் பரிணமிக்கிறது. 

நன்றி ஓர் அழகிய வார்த்தை.  இதனைப் புன்முறுவலோடு சொல்கின்ற பொழுது மட்டுமே உள்ளம் பூப்பூக்கும். நன்றியைச் சொல்ல மறந்தால், அது மனிதத்தின் குறைபாடு. அளவாய்ச் சொன்னால் அனுசரிக்கப்படுவர். அதிகமாய் நன்றி சொல்பவரது வாழ்க்கை அலங்கரிக்கப்படும்.  

விளையாட்டு மைதானத்தில் காலடி எடுத்து வைக்கின்றபோது மண்ணைத் தொட்டு கும்பிடுவது மரியாதை கலந்த பக்தி. அதே மண்ணில் சதம் அடிக்கும் போது விண்ணைப் பார்த்து மனதால் வணங்கி நிற்பது பக்தி கலந்த நன்றியுணர்வு. தனது வெற்றியை தனது குழுவினருக்கு அர்ப்பணிப்பது நன்றியுணர்வின் உன்னதப் பாங்கு. தினையளவு உதவியையும் நன்றியுணர்வு உள்ளவர்கள் பனைமரம் போல் பெரிதாய்க் காண்பர். அதேபோல், தனது துன்பத்தைப் போக்கியவரை ஏழு பிறப்பிலும் மனதில் வைத்துப் போற்றுவர் என்கிறார் நம் திருவள்ளுவர். அவரே, 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு 


என்ற வரிகள் மூலம் ஒருவர் செய்த நன்றியினை மறந்தவர்களுக்கு வாழ்வில் விமோச்சனமே இல்லை என்கிறார்.  

நன்றி சொல்வதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன.  அன்பின் செயல்களால் நன்றி சொல்வது, வார்த்தைகளால் நன்றி சொல்வதைவிட மிகவும் வலிமையானது.  ""நன்றி சொல்லாமலிருப்பது  ஒருவருக்கு அழகான ஒரு பரிசுப் பொருளை வாங்கி, அதை அருமையாகப் பெட்டகத்தில் பொதிந்து, அப்படியே வீட்டில் வைத்திருப்பது போன்றது''  என்கிறார் வில்லியம் ஆர்தர்  வேர்ட்.

"சிறு செயல்களுக்கு நன்றி சொல்லத் தெரியாதவர்களால் பெரிய செயல்களிலும் நன்றி சொல்ல முடியாது' என்கிறது எஸ்டோனியன் பழமொழி ஒன்று.  நன்றியைச் சொல்ல இந்த நவீனயுகத்தில் பல வழிகள் உண்டு.   ஒரு குறுஞ்செய்தி, ஒரு சின்ன மின்னஞ்சல் வரி, வணங்கிய கையினால் வாட்ஸ்ஆப்பில் பதிவு. நன்றி என்பது அலுவல் காரியங்களுக்கு மட்டுமானது அல்ல;   கணவன், மனைவி, தாய், தந்தை, உடன்பிறப்புகள் என உறவுகளுக்கெல்லாம் நன்றி சொல்வது உறவைப் பலப்படுத்தும்.  ""நன்றி தெரிவிக்கும் தம்பதியரின் குடும்ப வாழ்க்கை நிலையாகவும், வலிமையாகவும் இருக்கும், அதனுடன், நன்றி தெரிவித்து வாழ்பவர்கள் மிகவும் ஆனந்தமாய் இருப்பார்கள்'' என்கிறது அமெரிக்காவிலுள்ள மெக்சிகன் பல்கலைக்கழக ஆய்வு.  

நன்றியுணர்வு மேலோங்கும் போது, தாய் தெய்வமாய்த் தென்படுவார்; தந்தை சொல் மந்திரமாகும்; உறவுகள் உன்னதமாகும்; நட்புகள் பொக்கிஷமாகும்; நாடு கடந்த உறவுகள் நட்சத்திரமாய் மிளிரும்; முதியோர் இல்லங்களுக்கு மூடு விழா நடக்கும்.

நன்றியுணர்வு ஒரு வீரச் செயல். அது கோழைகளிடம் இருப்பதில்லை. வீர சிவாஜி ஒரு முறை வேட்டையாடச் சென்றார். அப்பொழுது சிங்கத்தோடு சண்டையிட்டதில் சிவாஜின் உடலில் காயம்பட்டதால் உடல்நலக் குறைவானார். சிவாஜியின் நண்பர்கள் அவரை மூர்ஷிதாபாத்  என்ற நகருக்கு அழைத்து வந்தனர். அதே நேரத்தில் முகலாயப் படையினர், சிவாஜியை தேடி அலைந்துகொண்டு இருந்தனர். சிவாஜியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு, இரண்டாயிரம் பொற்காசுகள் என அறிவிப்புச் செய்தார்கள். சிவாஜி தங்குவதற்கு அந்நகரத்தில் இடம் கொடுத்தவர் விநாயக்தேவ் என்னும் பண்டிதர் ஆவார். சிவாஜி என்று தெரியாமலே, ஒரு வழிப்போக்கனாக கருதி சிறந்த வைத்தியத்தை தந்தார். சிறிது நாட்களில் சிவாஜி குணமடைந்தார். 

அவரிடமிருந்து விடைபெறும் முன் தன்னை நன்கு கவனித்த விநாயக்தேவிற்கு நன்றிக்கடனாக ஒரு கடிதத்தைக் கொடுத்தார். ""இக்கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்று, இந்த ஊரில் இருக்கும் முகலாய அதிகாரியிடம் கொடுங்கள், அவர் சன்மானம் தருவார், பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றார். அப்பாவியான விநாயக்தேவ் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று அறியாமல், முகலாய அதிகாரியிடம் கொடுத்தார். அக்கடிதத்தில் தாம் தங்கியிருந்த இடத்தை தெரிவித்தும், தன்னை கைதுசெய்து, அதற்கான சன்மான தொகையை விநாயக்தேவிடம் கொடுக்கச் சொல்லியும் எழுதியிருந்தார் சிவாஜி. கடிதத்தைப் படித்த முகலாய அதிகாரி தனது ஆட்களோடு சிவாஜியை சிறைப்பிடித்தார். அப்பொழுதுதான் விநாயக்தேவுக்கு, இதுவரை தன் வீட்டில் தங்கியிருந்தவர் சிவாஜி என்று தெரிய வந்தது.  தனக்கு செய்த உதவிக்காக, தன்னையே நன்றிக்கடனாக்கியவர் மராட்டிய வீரர் சிவாஜி. அதனால்தான், விநாயக்தேவ் மனதில் மட்டுமல்ல, மண்ணின் மைந்தர்  எல்லோருடைய மனதிலும் வீரத்தோடும், ஈரத்தோடும் இன்றளவும் சிவாஜி நீங்காமல் நிறைந்து நிற்கிறார். 

நன்றி... ஓர்  அற்புதமான உணர்வு!
நன்றி... ஓர் அழகான வீரம்!

18/09/2018 மேலும் தொடர

காக்க... காக்க... காலம் காக்க!

தன்னிலை உயர்த்து! 8

ஒரு கிராமத்தில் ஒரு ஜென் குரு சிலகாலம் தங்கினார். அவரை அக்கிராமத்தின் ஏழை மனிதன் ஒருவர் நன்கு உபசரித்தார். அவரது உபசரிப்பிற்கு பரிசாக ஒரு பூவைத் தந்தார். "இப்பூவானது மந்திர சக்தி வாய்ந்தது. யாருக்கும் தெரியாமல் இப்பூவால் எந்த இரும்பைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும். இரண்டு நாட்கள் மட்டுமே இத்தகைய சக்தி அப்பூவிற்கு உண்டு. வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் குரு.
அவர் சென்ற பிறகு "ஓ! இன்னும் இரண்டு நாள் இருக்கின்றன. அதனால், நாளை பார்த்துக் கொள்ளலாம்" என்று முதல் நாளை ஒத்தி வைத்தார். மறுநாள் அவருக்கு சில அத்தியாவசிய வேலைகள் இருந்ததினால் அதில் மூழ்கிப்போனார். அன்று மதியம் நகரில் உள்ள இரும்புக் கடைக்குச் சென்றபோது தான் அன்று கடைகள் விடுமுறை என்பதை உணர்ந்தார். 
வேகமாக, பக்கத்து நகரத்துக்கு பயணித்தார். ஒரு டன் இரும்பினை வாங்கினார். கூலிக்கு ஆட்கள் கிடைக்காததால் தனியாய்ச் சுமந்தார். வீடு வந்து சேரும்போது இருட்டியிருந்தது. அப்பூவும் வாடி செயலற்றிருந்தது. கோபத்தில் பூவினைப் பிய்த்தார். அதில் ஒரு காகிதம் இருந்தது. "நண்பனே, நீ குறித்த நேரத்தில் செயல்படுத்தியிருந்தால், உனது வீட்டின் வாயிற்படியில் உள்ள இரும்பையாவது தங்கமாக மாற்றியிருக்கலாமே?' என எழுதப்பட்டிருந்தது. 
இப்படித்தான், காலம் தனது வலிமையை அவ்வப்போது உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. காலம் பொன் போன்றது என்பதை விட காலம் வலிமையானது. இவ்வுலகில் எவருக்காகவும் தன்னை வளைத்துக் கொள்ளாதது. அது தனக்கென்ற ஒரு பயணத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. "காலத்தின் அருமையை உணருங்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்குவது, சோம்பேறியாகத் திரிவது, தள்ளிப்போடுவது போன்றவற்றைத் தவிர்க்க பழகுங்கள். இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப்போடாமல், இன்றே செய்து முடியுங்கள்'' என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞர் செஸ்டர்பீல்ட் பிரபுவின் வரிகள், ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் அசைபோட வேண்டிய வரிகள்.
உண்மையில், காலம் சோம்பேறியை ஓட வைக்கும். சாதாரண மனிதனோடு கைகுலுக்கும். உழைப்பவனுக்காக சேர்ந்தே உழைக்கும். வல்லவனுக்கு சற்று வழிகொடுக்கும். அதனால்தான் வெற்றியாளர்கள் காலத்தை வென்றவர்களாகின்றனர்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் 
கருதி இடத்தாற் செயின்
என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வரிகள்தான் இவ்வுலகினை தங்கள் உழைப்பால் வென்றவரின் அடிப்படை வரிகள்.
இறைவனின் படைப்பில், இயற்கையின் நியதியில் இருபத்தி நான்கு மணிநேரம் அனைவருக்கும் பொதுவானது. இதனை யார் ஒருவர் சரியாகப் பயன்படுத்துகிறார்களோ, அவர்களை இவ்வுலகம் வெற்றி மாலையிட்டு கைதட்டி அழகு பார்க்கிறது. ஆர்னால்ட் பென்னட் என்ற ஏழை எழுத்தாளர், தனது லட்சியத்தை தான் ஒரு சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்று உறுதியாக்கினார். தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யும் நேரம் தவிர, எஞ்சிய நேரத்தை எழுதுவற்கும், படிப்பதற்கும் பயன்படுத்தினார். இதனால், ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு புதிய சிந்தனை மலர்ந்தது. ஒவ்வொரு நாளிலும் ஒரு கதை அல்லது கட்டுரை அச்சில் வெளியாகியது. அதன் பின்னர் பென்னட்டைச் சந்தித்தவர்கள், "எப்படி உங்களால் இது சாத்தியமாகிறது? நேரம் எப்படி கிடைக்கிறது?'' என்று ஆச்சரியப்பட்டனர். அவர்களது கேள்விகளுக்கு தனது அனுபவத்தை 24 மணி நேரத்தை எவ்வாறு மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் பயன்படுத்துவது என்ற கட்டுரையாக்கினார்.
காலத்தை இரட்டிப்பது தான் காலத்திற்கு நாம் செய்யும் நன்றிக் கடன். காலம் என்பது அழகாய் வளர்ந்திட்ட ஒரு செடி. இதில் வெட்டுக்கிளி இலைகளைத் தின்று செடியை அழிக்கும். ஆனால், தேனீக்கள் தேனை உறிஞ்சினாலும், மகரந்த சேர்க்கைக்கு தூது செல்லும். தேனீக்களால் கனிகள் கருக்கொள்ளும். வெட்டிப் பேச்சுதான் வெட்டுக் கிளிகள். இவர்கள் நேரத்தைத் தின்பவர்கள். இவை வாழ்வின் அழிவுகள். ஆக்கப்பூர்வமே தேனீக்கள். தேனீக்கள் பலனை இரட்டிப்பாக்கும்.
காலம் தவறாமை என்பது இயற்கை என்னும் பள்ளிக்கூடம் நமக்கு அனுதினமும் கற்றுத் தரும் பாடம். அதிகாலைச் சூரியனும், மாலைச் சந்திரனும் ஒரு நாளும் காலதாமதத்திற்காக காரணம் தேடியதில்லை. சற்றே ஒய்வெடுத்துக் கொள்ள இவை எவரிடமும் கெஞ்சுவதில்லை. ஒன்று நிச்சயம். நாம் காலத்தை நிர்ணயிப்பதில்லை. காலத்தோடு நாம் பயணிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கை தன்னைத் தானே நிர்வகிப்பது போல், நாம் நம்மை நிர்வகித்துக் கொண்டால், காலத்தின் ஓட்டத்தில் நாம் மீன்கள் போல் எதிர் நீச்சலிடலாம்.
ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது அவரது ஒட்டு மொத்த நிமிடங்களின் வாழ்க்கை. நிமிடங்களைச் சரிபடுத்தினால் வாழ்வு சரியாகும். நேரத்தின் நிர்வாகம் என்பது ஒரு கிரிக்கெட் விளையாட்டைப் போன்றது. ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு மணி நேரம். ஒரு ஓவரில் ஆறு பந்துகளுக்கு, அதிக ரன் எடுப்பவர் தான் "ஆட்ட நாயகனாக வாய்ப்பு அதிகம். அதுபோலத்தான் கிடைக்கின்ற நேரத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதன் மூலமே அதன் விளைவுகளும் அமைவதுண்டு.
மகாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை இரயிலில் பயணம் செய்யும் போது, அவரது உதவியாளிடம், "நேரம் என்ன ?'' என்று கேட்டார். "ஐந்து மணி'' என்றார் உதவியாளர். காந்தியின் கடிகாரத்தில் ஐந்து மணியாக இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. கிடைத்த ஐந்து நிமிடத்தில் ஒரு கடிதம் எழுதி முடித்தார் மகாத்மா காந்தி. பின்னர் உதவியாளரிடம், "ஒரு நிமிடத்தில் எத்தனையோ வெற்றி தோல்விகள் மாறியிருக்கின்றன. ஐந்து நிமிடம் என்பது எனது வாழ்வில் மட்டுமல்ல, இந்தியர்களின் வாழ்வில் மிக முக்கியமானது. சரியான நேரம் சொல்லத் தவறிய உங்களுக்கு கடிகாரம் எதற்கு?'' என்று கடிந்து கொண்டார். 
சாதாரண மனிதர்களுக்கு வாழ்க்கை பொழுதுவிடிவதிலும், மறைவதிலும் கழிந்து விடுகிறது. நடுத்தர மனிதர்களின் வாழ்க்கை மணிகளில் எண்ணப்படுகிறது. உயர்ந்தவர்களின் வாழ்க்கை நிமிடங்களில் கணக்கிடப்படுகிறது. சாதனையாளர்கள் கடிகாரத்தின் வினாடி முள்ளோடு போட்டி போட்டுக்கொண்டிருப்பவர்கள்.
அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை அவசரமானது, அவசரமில்லாதது, முக்கியமானது மற்றும் முக்கியத்துவமில்லாதது என வகைப்படுத்தலாம். அவசரமானதையும், முக்கியமானதையும் அன்றே செய்தால் அந்தந்த நாளில் வெற்றி பெற முடியும். இது காட்டுத்தீயை அணைப்பதைப் போன்றது. புதிய சிந்தனைகள் அற்றது. அவசரமில்லாததையும், முக்கியமில்லாததையும் அந்த நாளில் செய்பவர் நேரத்தை விரயம் செய்பவராவார். இது பொழுதுபோக்குபவர்களின் பண்பு. முக்கியமில்லாதவற்றில் அவசரமாக ஈடுபடுபவர்கள் வெற்றிக்கோட்டினைத் தொட வெகுநேரமாகும். ஏனெனில், இவர்களின் பணிக்கிடையில் வாட்ஸ்அப்பும், பேஸ்புக்கும், டிவிட்டரும் காலத்தைச் சுரண்டிவிடும். கதே என்ற ஜெர்மன் நாட்டு அறிஞர், "அதிக முக்கியமான விசயங்கள், முக்கியத்துவமற்ற விசயங்களின் தயவில் ஒரு போதும் இருக்கக் கூடாது'' என்பார். அவசரமில்லாத ஆனால் முக்கியமானவற்றைச் செய்பவர்கள் தான் திட்டமிட்டு வாழ்வை நடத்துபவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். 
2002 ஆம் வருடம் தன்னை உருவாக்கிய "மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' க்கு ஒரு பாடம் நடத்துவதற்காக சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது ரயில்வே கேட் அருகில் கடுமையான போக்குவரத்து நெரிசல். அப்துல் கலாம் வர இன்னும் சற்று நேரம் ஆகும், போக்குவரத்து சீரடையவில்லை எனப் பேசி கொண்டிருந்தனர். வாகனத்திலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினார். அவர்களின் கண்கள் விரிய அப்துல் கலாம் சரியான நேரத்தில் வகுப்பறைக்குள்ளே நுழைந்தார். காலம் கடந்து வந்தார் கலாம் என்பதை மாற்றி காலம் கடந்து நின்றார். "உனது எல்லா நாள்களிலும் தயாராக இரு' என்ற 19 ஆம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்த ஒரு கவிஞனின் வரிகள் காலத்தால் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளின் அற்புதத்தை பறைசாற்றுகிறது. எனவே, நேர நிர்வாகம் ஒரு மனிதனை, ஒழுங்குபடுத்தும். அவரது செயல்பாட்டினை முன்னுரிமைப்படுத்திக் காட்டும். முன்யோசனையுடன் நடந்துகொள்ள வைக்கும். திட்டமிடத் துணை நிற்கும்.
காலத்தைத் திட்டமிடுதல் வாழ்க்கையை திட்டமிடுதலாகும். ஒவ்வொரு மாதமும் திட்டமிடுவதை விட, ஒவ்வொரு வாரத்திலும் திட்டமிடுவதே இலட்சியத்தை அடைய எளிய வழி. ஆனால், காலத்தைச் செலவழிக்கும் போது நாள் கணக்கிலோ, மாதக் கணக்கிலோ செலவழிக்காமல், மணிக்கணக்கிலோ, நிமிடக் கணக்கிலோ செலவழிக்க வேண்டும். அதனை அட்டவணைப்படுத்தி செலவிற்கான நேரத்தை பணத்தை செலவழிப்பதைபோல் எழுதி வர வேண்டும். நாம் காலத்தை கணக்கிட்டு வாழ்ந்திருந்தால் எதிர்கால சந்ததியினருக்கு நமது வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. அட்டவணைப்படுத்தி வாழத் தவறியிருந்தால் நமது வாழ்க்கை ஓர் எச்சரிக்கை. பயனோடு கழிக்கின்ற காலங்கள் மனிதனை வெற்றி என்னும் நட்சத்திரம் நோக்கி நகர்த்துகிறது. 
செந்நிறச் சூரியோதமாய்ப் புலர்ந்து, மித வெயிலில் செடிகள் மலர, கடும் வெயிலில் நிழல்கள் மறைய, மாலை வெயிலில் நீளும் நிழல்கள் கடந்து, ஒளிந்திருக்கும் சந்திரனிடம் பளிச்சிடும் நட்சத்திரங்கள், முகம் மலர் நிலவிடம் பேசிடும் அல்லி போல், ஒரு நாளென்பது ஒரு கதம்பக் கவிதையாய் மலர்ந்திருக்க வேண்டும். அது "பணியின் நேரம், வெற்றியின் பரிசு; சிந்திக்கும் நேரம், சக்தியின் பிறப்பிடம்; விளையாடும் நேரம், நீங்கா இளமையின் ரகசியம்; வாசிப்பின் நேரம், அறிவின் ஊற்று; நட்பின் நேரம், மகிழ்ச்சியின் பாதை; அன்பின் நேரம், கடவுளின் வாய்ப்பு; சுற்றத்தோடு செலவிடும் நேரம், தன்னலத்தை குறைக்கும்; சிரித்து மகிழும் நேரம், ஆத்மாவின் ஓசை' என்ற அயர்லாந்து நாட்டு கவி வரிகள்போல் கலந்திருக்க வேண்டும்.
நமது வாழ்வு நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. குழந்தைப் பருவங்கள் அறியாமலே கழிந்து விடுகின்றது. முதுமைப் பருவங்கள் அனுபவப் பகிர்விலேயே அடங்கிப் போகிறது. இடைப்பட்ட காலங்களை நமது பாரதத்தின் முதல் பிரதமர் தனது மேசையில் வைத்திருந்த ராபர்ட் ப்ரோஸ்ட் என்னும் அமெரிக்க கவிஞரின் 
Woods are lovely dark and deep
But I  have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep 
என்ற சிற்றோடையின் ஓட்டம் போல் சில வரிகளால் உந்தினால், அரட்டைகள் குறையும், ஆற்றல் அதிகரிக்கும்.
எந்த நேரத்தில் எதைத் தொடங்கலாம் என்று தினமும் நாட்காட்டியின் பின்புலத்தைப் பார்ப்பவர்களுக்கு, வாழ்வதன் நன்புலத்தை "நாளும் கோளும் நலிந்தவர்க்கு இல்லை' என்பது தெளிவாக்கும். கிடைக்கின்ற நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்ற தெளிவு கொண்டவனுக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. விண்ணில் செல்கின்ற ராக்கெட்டுக்கு பயணம் தொடங்கும் நேரத்தை வேண்டுமென்றால் நாம் தீர்மானிக்கலாம், அதன் பிறகு அது கடக்கும் லட்சக்கணக்கான மைல்களுக்கு எந்த நாட்காட்டியிலிருந்து நல்ல நேரம் பார்க்க முடியும்? 
இவ்வுலகில் இழந்த பணத்தைப் பெற்றுவிடலாம்; இழந்த நட்பைப் புதுப்பித்துவிடலாம். ஆனால் கடந்த காலத்தை எவராலும் திரும்பப் பெறமுடியாது. 
ஒரு வேட்டைக்காரன் கையில் கவணுடன் காட்டிற்குச் சென்றான். ஒரு மரத்தின் மேலிருந்த பறவையினை தனது கவணால் அடிக்க, கீழே கிடந்த அழகிய சிறு கற்களை எடுத்தான். ஒவ்வொன்றாய் கவணில் கட்டி வீசினான். பறவையின் மீது படவில்லை. சிறிது நேரத்தில் அப்பறவையும் பறந்தது. எறிந்த கற்களெல்லாம் அருகில் ஓடிய நதியில் விழுந்தது. எஞ்சியிருந்த ஒரு கல்லினைப் பார்த்தான். அழகாய் இருந்தது. ஆசையாய் விளையாடும் தன் குழந்தைக்கு அதைப் பரிசளிக்க வீட்டிற்கு எடுத்து வந்தான். வரும் வழியில் ஒரு வைர வியாபாரியைச் சந்தித்தான். அவர் அக்கல்லை வைரமென்று தெரிந்ததும், அதிக விலை கொடுத்து வாங்கினார். கை நிறையப் பணம் கிடைத்த பின்பும் சோகமாயிருந்தான். காரணம் கேட்டார், வைர வியாபாரி. "ஆற்றில் எறிந்த அத்தனை கற்களையும் வைரமென்று தெரியாமலே எறிந்துவிட்டேனே! இது எனக்கு முன்னமே தெரிந்திருந்தால் நான் பெரிய அதிர்ஷ்டசாலியாய் இருந்திருப்பேனே?'' என்றார். அது போலத்தான் ஒவ்வொரு நாளும் வைரக்கற்கள். மிகவும் கிடைத்தற்கரியது.
காலம் விலைமதிக்க முடியாத பரிசு!
காக்க... காக்க... காலம் காக்க!

04/09/2018 மேலும் தொடர

உழைப்பவருக்கே உலகம்!

தன்னிலை உயர்த்து! 7
ஓர் அதிகாலையில், அமெரிக்காவிலிருந்து விமானம் ஒன்று கிளம்பியது. கிளம்பிய அரைமணி நேரத்தில் அனைவரும் உறங்க ஆரம்பித்தனர். ஒரு வயதான பெரியவர் மட்டும் சில புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கருகில் இருந்த இளைஞர், அவர் அமெரிக்காவின் மிகச்சிறந்த மனிதரும், தொழிலதிபருமான ராக்பெல்லர் என்பதைத் தெரிந்துகொண்டார். 
"ஐயா, நீங்கள்தான் ஏகப்பட்ட பணமும், புகழும் பெற்றுவிட்டீர்களே! இன்னும் இந்த வயதான காலத்தில் ஏன் உழைக்கிறீர்கள்? நிம்மதியாகத் தூங்க வேண்டியதுதானே?'' என்றார். 
"சரிதான், இப்பொழுது விமானி இவ்விமானத்தை நல்ல உயரத்தில் பறக்க வைத்துவிட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. இப்பொழுது விமானி என்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும்?'' என்றார். 
"விமானம் கீழே விழுந்து பெரிய விபத்து ஏற்பட்டுவிடுமே'' என பதற்றத்தோடு பதிலளித்தார் இளைஞர். 
இதைக்கேட்டு புன்னகைத்த ராக்ஃபெல்லர், "வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, "உயரத்தைத் தொட்டு விட்டோமே' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்'' என்று பதிலளித்தார். அப்பயணத்தில் அவ்விளைஞனுக்கு வாழ்க்கையை விழிப்படையச் செய்தவர் ராக்பெல்லர். 
உழைப்பு ஒரு நதியைப் போன்றது. அதன் பயணம் பல தடைகளைத் தாண்டிச் சென்றாலும், அது செல்லும் வழியெல்லாம் நம்பிக்கைப் பூக்களை மலரச் செய்கிறது. வறண்டிருக்கும் நதி தன்னுள் உள்ள ஊற்றினால் நீரினைத் தருவதுபோல், உலகிற்கு தனது அனுபவங்களால் வாழ்வின் செழிப்பினைத் தருவதுதான் உழைப்பு. 
உழைப்பதால் உழைத்தவரின்மதிப்பு கூடுவதோடு, உழைப்பின் மதிப்பும் உயரும். கல்லினில் உழைத்தால் மனிதன் சிற்பியாவான், கல் சிற்பமாகும். சொல்லினில் உழைத்தால் மனிதன், கவிஞனாவான். வார்த்தைகள் கவிதையாகும். 
ஒட்டுமொத்த போர்ப்படையினரும் களைப்பில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, கனலின் வெளிச்சத்தில் படித்துப் படித்து போர்த்திறம் தெரிந்தபோது, சாதாரண சிப்பாயாயிருந்த நெப்போலியனை படைத்தலைவனாக்கி அழகு பார்த்தது உழைப்பு. ஒட்டுமொத்த உலகத்தையும் தனது கழுகுப் பார்வையிலே பார்த்துக் கொண்டிருந்தன வல்லரசு நாடுகள். அக்கண்களுக்கு கறுப்பு மை பூசி பொக்ரானில் அணுகுண்டினை சோதித்துக் காட்டியும், வானுயர இந்தியாவின் திறமையை ஏவுகணைகளால் நிலைநிறுத்தியதால்தான், இந்தியாவின் ஜனாதிபதியாக டாக்டர் அப்துல் கலாமை அழகுபடுத்திப் பார்த்தது அல்லும் பகலும் ஓய்வறியாத உழைப்பு. உழைக்கும் கரங்கள்தான் அழகிய கரங்கள் என்பதை,
" நீண்ட நாள் முழுதும் 
கணத்திற்கு கணம் 
நேர்மையாய், துணிவாய்
உண்மையாய் உழைக்கிறவன் கரங்களே 
அழகிய கரங்கள்' 
என்கிறார் அக்னிச்சிறகுகளான அப்துல்கலாம்.
1986-இல் அமெரிக்காவில் ஜார்ஜ் கலப் என்ற பேராசிரியர் திறமையாளர்களைப்பற்றி ஓர் ஆராய்ச்சி நடத்தினார். அதற்காக 1500 சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆராய்ச்சியின் முடிவாக சாதனையாளர்கள் திறமையானவர்கள் இருப்பினும், அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் உழைத்ததனால்தான் சாதித்தார்கள் என்று வெளியிட்டார்.
நீரில் மேற்பகுதியில் அழகாய் நீந்துகின்ற வாத்தினைப் பார்ப்பதற்கு எவ்வித செயல்பாடும் இல்லாமல் நீந்துவதாகத் தெரியும். ஆனால் நீருக்கடியில் அதன் கால்கள் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும். ஒரு பாடும் பறவை (Humming Bird) பறக்க வேண்டுமானால், ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் முறை தனது சிறகுகளை அடித்துப் பறக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் வெற்றியாளர்கள் பரிணமிக்கின்றபோது அவர்களின் உழைப்பு வெளியே தெரிவதில்லை. ஆனாலும் அவர்கள் ஊழின், உப்பக்கத்தையும் காணத் தவறுவதில்லை.
அளப்பரிய சிற்பங்களைத் தன் அசாத்தியமான திறமையால் உலகிற்குத் தந்த மைக்கேல் ஏஞ்சலோ, "என் திறமையை அடைய நான் எவ்வளவு பாடுபட்டு உழைத்தேன் என்பதை மக்கள் அறிந்தால், நான் வடிக்கும் சிற்பமெல்லாம் ஓர் அதிசயமாகவே தோன்றாது'' என்றார். "கண்ணில் காணும் சிற்பத்தின் அழகை விட மண்ணில் விழுந்த வியர்வைதான் அழகு'' என்கிறது ஏஞ்சலோவின் வாசகம்.
ஒரு பணக்காரத் தந்தை. ஆனால், அவரது மகன் சுயமாகச் சம்பாதிக்கின்ற காலம் வந்த பிறகும் அதற்கான முயற்சியில்லாமலிருந்தார். "உழைக்க மனமில்லாதவன் எவரும் உண்ணலாகாது' என்ற பைபிளின் வரிகள் நினைவுக்கு வந்ததுபோல், "இனிமேல் சம்பாதித்துக்கொண்டு வந்தால்தான் வீட்டில் தங்குவதற்கு இடம்'' என்று கண்டிப்பாய் சொன்னார். மறுநாள் காலை கிளம்பிய மகன், மாலை வீடு வந்துசேர்ந்தார். ஒரு ரூபாய் நோட்டை எடுத்து தந்தையிடம் தந்தார். எரிந்து கொண்டிருந்த அடுப்பில் அப்பணத்தை தூக்கிப்போட்டார் தந்தை. அது எரிந்து சாம்பலானது. எவ்வித வருத்தமில்லாமல் தூங்கினார் இளைஞர். மறுநாளும் பணிக்குச் சென்றார். வீட்டில் நுழைந்ததும் மகன் கொடுத்த ரூபாயைத் தந்தை அடுப்பில் போட்டார். மூன்றாவது நாள் அப்பாவிடம் பணத்தைத் தந்தார். அப்பா அதேபோல அடுப்பினில் தூக்கிபோட, ஓடிச் சென்று அப்பாவின் கையைப் பிடித்தார். "அப்பா! அப்பணத்தை நெருப்பில் போடாதீர்கள்'' என்று அலறினார். 
"மகனே... இன்றுதான் நீ உண்மையாக உழைத்திருக்கிறாய்'' என்றார் தந்தை. "அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?'' என்ற மகனின் கேள்விக்கு, "மகனே, நீ உழைத்துச் சம்பாதிக்காத பணம் கரியானபோது நீ கவலைப்படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். உழைப்பின் அருமையைத் தெரிந்தவன்தான் அதனைச் செலவழிப்பதிலும், சேமிப்பதிலும் அக்கறை கொள்வான்'' என்றார் தந்தை.
ஆகவே, உழைப்பு ஓர் உன்னதம். அதை மறுப்பவன் சோம்பேறி. வெறுப்பவன் முட்டாள். ஆராதிப்பவன் மனிதன். உறுதியாய்ப் பிடிப்பவன் சாதனையாளன். உருமாறுபவன் சரித்திரம்.
பண்டைய தமிழ்நாட்டில் வாழ்ந்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் வீரர்களாயிருப்பதில் பெருமை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் வாழ்வை தமது நாட்டிற்காகவே அர்ப்பணித்தவர்கள். எதிரிநாட்டுப் படையினர் படையெடுத்து வந்தால் முனை முகத்து நிற்பவர்கள். தமிழ்நாட்டின் எல்லையை விரிவாக்க முன்னேறிச் சென்று எதிரி நாட்டை வேட்டையாடுபவர்கள். அவர்களது ஒவ்வொரு நாள் பணியும் போர்புரிவதே. போரினில் காயங்கள்தாம் வீரனுக்கு தினமும் கிடைக்கும் பரிசு. அதுதான் விழுப்புண். அவ்வீரர்கள், தாங்கள் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்ப்பதுண்டு. அதில் தங்களின் உடலில் விழுப்புண் படாத நாட்களை எல்லாம் இம்மண்ணில் வாழ்ந்த நாட்களாகவே கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. விழுப்புண்பட்ட நாட்கள் மட்டுமே அவர்கள் வாழ்ந்த நாட்களாக கருதுவார்கள் என்பதை 
விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து
என்கிறார் உலகப் பொதுமுறை கண்ட நம் திருவள்ளுவர்.
உழைப்பு என்பது வெற்றிவரை அல்ல. வாழ்வின் இறுதி வரை. அதில் வாரத்தின் இறுதி நாளும் விடுமுறை அல்ல. வாரத்தின் முதல் நாளும் ஓய்வு அல்ல. வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக் கிழமையை ஓய்வு நாளாகக் கருதாமல் உழைக்கும் நாளாகக் கருதுபவர் விழுப்புண் கண்ட வெற்றியாளராகிறார். 
ஒரு நாட்டினை முன்னேற்றப் பாதைக்கு வித்திடுவது அந்நாட்டின் இயற்கை வளம் அல்ல, அந்நாட்டின் மனிதவளமும் அதனை நடத்திச் செல்லும் நிர்வாகத் திறனுமேயாகும். இரண்டாம் உலகபோரின்போது இயற்கை வளமும் கனிமவளமும் சாம்பலாகிப்போன ஜப்பான், இன்று சரித்திரம் படைப்பதற்குக் காரணம், அந்நாட்டின் கடின உழைப்பேயாகும்.
உழைப்பு நமக்கானது மட்டுமல்லாமல், நம்மை வளர்த்த நாட்டிற்காக இருக்கவேண்டும். "எழுமின்! விழுமின்! கருதிய கருமம் கைகூடும் வரை நில்லாது உழைமின்!' என்கின்ற சுவாமி விவேகானந்தரின் வரிகள் நம் இந்திய தேசத்தின் முன்னேற்றத்திக்கான அறை கூவல். 
இன்னும் ஒருபடி மேலாக, "ஒவ்வோர் இளைஞனும் மனிதகுலத்தின் பெருமைக்காகப் பாடுபடக்கூடிய ஒரு வேலையைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அப்போது சுமைகள் நம்மை நசுக்காது. ஏனென்றால் அவையெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சியோ எல்லையற்றது. கோடான கோடி மக்களுக்கும் சொந்தமானது. கஞ்சத்தனமில்லாதது, அகங்காரமற்றது. நமது சாதனைகள் நீடித்து வரும் என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உன்னதமான மனிதர்கள் வடிக்கும் கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும்'' என்கிறார் ஜெர்மனியின் காரல் மார்க்ஸ். 
கிராமங்களில் தானியக் கதிர்களை சாலைகளில் கொட்டி, வாகனங்கள் அதன் மேல் பயணிக்க, தானியங்கள் தனிப்படுவதற்காக காத்திருப்பர். அர்த்த ராத்திரியில் பயணிக்கும் ஒற்றை வாகனத்தின் நான்கு சக்கரங்களை எதிர்பார்த்து உறக்கமில்லாமல் காத்திருக்கும் முதிய விவசாயிகள் ஏராளம். அவர்கள் கண்ணுங் கருத்துமாய் தானியங்களை உருவாக்கியதோடு நாட்டின் தலைமகனுக்கும் உணவளிப்பவர்கள். வியர்வை என்னும் முத்துக்களில் தெரியும் அவர்களது உழைப்புதான் உலகையே அவர்கள் பின் தொடரச் செய்கிறது. 
இதனை, 
களைபோக்கும் சிறு பயன் விளைக்க இவர்கள்
உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன் 
இவ்வுலகு உழைப்பவர்க்குரியது என்பதையே! 
என்ற பாவேந்தன் பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப, உலகம் உழைப்பவருக்கே!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

28/08/2018 மேலும் தொடர

முயற்சியே வெற்றிக்கு முன்னோடி!

தன்னிலை உயர்த்து! 5
ஸ்பெயின் நாட்டு மன்னர் சார்லûஸ ஓர் இளைஞர், கையில் ஒரு வரைபடைத்தோடு சந்தித்தார். மன்னரிடம் அவ் வரைபடைத்தைக் காட்டி, "தாங்கள் வசதிகள் செய்து தந்தால் கடல் கடந்து, கிழக்கு இந்திய தீவுகளுக்கு சென்றுவர முடியும், அது உலகத்தின் புது முயற்சியாக இருக்கும்'' என்றும் விவரித்தார். மன்னரும் அவ்விளைஞரின் புதிய முயற்சிக்கு தலையசைத்தார். ஐந்து கப்பல்களில் 265 மாலுமிகளோடு, பல ஆயிரம் கிலோ உணவுப் பொருள்களோடு, அவர்களின் கடற்பயணம் துவங்கியது. பல செங்குத்தான மலைகளுக்கு நடுவிலும், ஆர்ப்பரிக்கும் கடல் அலையை எதிர்கொண்டதில் உணவு பொருள்களுடன் வந்த கப்பலும், மற்றொரு கப்பலில் வந்தவர்களும், அவ்விளைஞனிடம் சொல்லாமலேயே சொந்த நாட்டிற்கே திரும்பினர். உணவு பொருட்கள் தீர்ந்து போயின. பிளேக் நோய் தாக்கியது. கடல் ஒவ்வாமையால் சிலர் இறந்தனர். அவர்களுக்குள்ளே ஏற்பட்ட கலகத்தினால் சிலர் இறந்தனர். கடைசியில் மூன்று கப்பல்களில் இருந்தவர்கள் முதல் மணற்பரப்பை அடைந்தனர்.

இப்படி பல தீவுகளைக் கடந்தனர். பிலிப்பைன்ஸ் தீவினுடைய தலைவனுக்கு உதவியாய் இவ்விளைஞன் செல்ல, எதிரிப் படையினரால் கொல்லப்பட்டான். ஆனாலும் அவ்வீர இளைஞனின் முயற்சி தோற்றுவிடக்கூடாதே என்பதற்காக எஞ்சியிருந்தவர்கள் தொடர்ந்து பயணித்தனர். அவர்கள் பயணம் உலகத்தை ஒருமுறை சுற்றி வலம் வந்தனர் என்ற பெருமையைத் தந்தது. உலகம் உருண்டை என நிரூபிக்கப்பட்டது. அப்போது அந்த வீர இளைஞன் மெகல்லன் உயிரோடு இல்லை. ஆனாலும், மெகல்லனின் முயற்சிதான் இன்னும் வரலாற்றில் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்தவர் பெயரில் முன்னிறுத்தப்படுகிறது. ஏனெனில் அது ஒரு சாதாரண முயற்சி அல்ல. வரலாற்று முயற்சி. தட்டையானதுதான் உலகம் என உலகத்தில் ஒவ்வொரு பகுதியில் வாழ்ந்தவர்களெல்லாம் நம்பிக் கொண்டிருந்தபோது உருண்டை என்று சில அறிவு ஜீவிகளும், அறிஞர்களும் தங்களது கோட்பாடுகளால் சொல்லிக்கொண்டிருந்ததை, செயல்பாட்டின் மூலம் நிகழ்த்தி காட்டிய முயற்சி இது. மெகல்லன் சுற்றி வரவில்லை. ஆனால், அவரது முயற்சி வெற்றி கண்டது. "முயற்சிகள் தவறலாம்; முயற்சிக்கத் தவறாதே' என்ற வரிகளுக்கு உலகின் மிகச் சிறந்த உதாரணமாக மிளிர்ந்தவர் மெகல்லன். வெற்றியாளர்கள் மட்டுமல்ல, எவருக்கும் முயற்சி இல்லை என்றால் வளர்ச்சி இல்லை. பிறந்த குழந்தை, தவழ முயற்சிக்கிறது; பின்னர் நடக்க முயற்சிக்கிறது; பேச முயற்சிக்கிறது; இப்படி ஒவ்வொரு முயற்சியும்தான் அக்குழந்தையை வளர வைக்கிறது. இவையனைத்தும் குழந்தைகள், தங்களது பெற்றோர்களைப் பார்த்து அப்படியே பிரதிபலிக்கின்றனர். Children learn by imitation என்பார்கள். ஆனால் வளர்ந்த பிறகும், வாழ்க்கை முழுவதும் பிறரின் பிரதிபலிப்பாயிருந்தால் தோல்வி. வாழ்வெல்லாம் முயற்சியானால் வெற்றி.

இராபர்ட் ப்ரோஸ்ட் என்னும் அமெரிக்க நாட்டு கவிஞர் ஒரு முறை ஒரு காட்டினில் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றார். நடுக்காட்டில் அப்பாதை இரண்டாகப் பிரிந்தது. ஒரு பாதை மனிதர்கள் அடிக்கடி பயணித்த, தெளிவான பாதை.

மற்றொன்று அடிக்கடி பயணிக்காத காய்ந்த சருகுகளால் மூடியிருந்த தெளிவற்ற பாதை. அதிகம் பயணிக்காத இரண்டாது பாதையில் பயணித்தார். அப்புதிய முயற்சியினால் புதிய அனுபவம் கிடைத்தது. அற்புதக் கவிதைகளை அகிலத்திற்கும் தந்தார். The Road Not Taken என்னும் அக்கவிதையில், "அதிகம் பயணிக்காத பாதைகளில் நடக்க கற்றுக்கொண்டவர் வாழ்க்கை, அதிகம் வாசிக்கப்படும்' என்கிறார். தனது புகழுக்கு காரணம் புது முயற்சியே என்கிறார்.

எவரெஸ்டில் முதலில் ஏறிய எட்மண்ட் ஹிலாரி, விண்வெளியில் முதலில் பயணித்த யூரி காகரின், அட்லாண்டிக் கடலை முதலில் நீந்திக் கடந்த பெனாய்ட் லோகம்ட், இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் சுசேட்டா கிர்ப்ளானி என முதல் முயற்சிகள் வரலாறாகிறது.

பாதைகளின் பயணங்கள் மட்டுமல்ல, முயற்சிக்க கற்றுக் கொடுத்தவை வாழ்வில் நிறைய இருக்கின்றன. ஆப்பிள் பழம் மட்டும் கீழே விழவில்லை. எல்லா மரத்திலிருந்தும் பழங்கள் கீழே விழுந்தன, விழுகின்றன, விழவிருக்கின்றன. அது ஏன்? எப்படி? எதற்கு? என்ற கேள்விக்கு நியூட்டன் விடை காண முயற்சி செய்தபோது புவியீர்ப்பு விசை கிடைத்தது.

இதைப்போலவே, "பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்; எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்' என்ற வரிகளுக்கேற்ப இவ்வுலகில் நாம் முயற்சிப்பதற்கான சூட்சுமங்கள், கற்பாறைகளிலும், பறவைகளுக்குள்ளும், வெளித்தெரியாமல் படிந்திருக்கின்றன. உலகில் மறைந்துள்ள படிமங்களின் ஆற்றல்களை வெளிக்கொணர்கின்ற ஒவ்வொரு முயற்சியும் அரிய கண்டுபிடிப்புகளே. முயற்சிகள் எல்லோரும் எடுப்பதுண்டு. முயற்சிகளை எவரும் திரும்பி பார்க்கவில்லையென்றால், அது சாதாரண செயல். சிலர் பார்க்க முற்பட்டால் அது வித்தியாசமானது. இது கடினம் என பேசத்தொடங்கினால், அது பெரும் செயல். இது முடியாதென்று உலகம் பேசினால் அது வரலாறு. தமிழகத்தின் ஜி.டி, நாயுடுவும், ஜப்பானியர் ஹோன்டாவும், தங்களது முயற்சியால் உலகைத் திரும்பிப்பார்க்க வைத்தவர்கள்.

வாழ்வின் தேடல் முயற்சியில் பிறக்கிறது. அது முட்டையிலிருக்கும் குஞ்சு, அதன் மேலுள்ள கடினமான ஓட்டினைக் தனது அலகால் கொத்தி, வெளிவருவதைப்போன்றது. முட்டையின் வெளி ஓடுகளை உடைத்து எந்தக் குஞ்சும் வெளிவந்ததாய் சரித்திரமில்லை. உள்ளிருக்கும் குஞ்சியின் முயற்சியில்தான் அதன் வாழ்க்கையே உள்ளது.

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்

என்ற திருவள்ளுவரின் வரிகள் மூலம் நாம் மேற்கொள்ளும் செயல், நமக்கு சிறப்பினைத் தரும் என்று எண்ணும்போது முயற்சி ஆர்ட்டீசியன் போல் ஊற்றெடுக்கும்.
முயற்சி என்பது தொடங்கிவிட்டு முடிவு செய்வதல்ல. உயர உயர குதித்துப் பார்த்து, தன்னால் திராட்சைப் பழத்தைத் தின்ன முடியவில்லை என்றதும், அடுத்த முயற்சியைக் கைவிட்டு இந்தப் பழம் புளிக்கும் என்று கைவிடுவதல்ல முயற்சி. தன் அலகினால் குடுவையிலுள்ள நீரினைப் பருக முடியவில்லை என்றாலும், முயற்சியால் கற்களைக் குடுவையில் சேர்த்து, நீரினை மேலேறச் செய்து, பருகிய காக்கையின் வெற்றிதான் முயற்சி. மேலும், ஒரு செயலைத் தொடங்கி அது முடியாமல் போனதும் கைவிடுவது அல்ல, முயற்சி. செயலினை வெற்றியாக்க நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தான் முயற்சி.

1954- ஆம் ஆண்டு வரை உலகின் ஒட்டுமொத்த கட்டுரைகளும் மனித உடலமைப்பின்படி ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடி கடக்க முடியாது என்பதை உறுதியிட்டன. ரோஜர் பேனிஷ்டர் அவ்வாராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தார். அவர் ஒரு ஓட்டப் பந்தய வீரர். குறைந்த தூரம் ஓடுபவர். தனது இலக்கினை நான்காகப் பிரித்தார். முதல் ஒரு மைல்கல்லினை ஒரு நிமிடத்திற்குள் ஓடி முடிக்க உறுதிகொண்டார். பல முயற்சிகளுக்குப்பின் 58 வினாடிகளில் ஓடி முடித்தார். சிறிது ஓய்வெடுத்து அடுத்த கால் மைல் கல்லினை அதே வேகத்தில் கடந்தார். வேகத்தைக் கூட்டி, ஓய்வினைக் குறைத்து கடைசியில் 3 நிமிடம் 59.6 விநாடிகளில் அந்த மைல் இலக்கினை கடந்தார்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்

என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கு ரோஜர் பேனிஷ்டர் வாழ்க்கையானார். இலக்கு தெரியாமல் முயற்சிப்பதுதான் கடினம். இலக்கினைக் கணித்து, முயற்சிக்க ஆரம்பித்துவிட்டால் எல்லாம் எளிது. அது ஒரு செகண்டில் 11.2 கி.மீ. வேகத்தில் பயணித்து விண்ணில் செல்லும் ராக்கெட்டைப் போன்றது. தெளிவான இலக்கினை நோக்கிய வெற்றி எளிதில் விண்ணைத் தொடும். முயற்சிக்க மறுத்தால் மூச்சும் நின்றுவிடும்! புதிய முயற்சிதான் வரலாற்றில் தடம் பதிக்கும்!

14/08/2018 மேலும் தொடர

திண்ணிய எண்ணமே, குறிக்கோள்!

தன்னிலை உயர்த்து! - 3
ஒரு மன்னர் மிகவும் வருத்தத்தோடும் கவலையோடும் காணப்பட்டார். தனது மகன், மகுடம் சூட வேண்டிய வயதிலும் ஒரு வீரனைப் போல் இல்லாமல் உடல் மெலிந்து இருக்கிறாரே என்ற வருத்தம் மன்னரை வாட்டியது. இளவரசனுக்கு நிறைய உணவு வகைகளையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி லேகியங்களையும் கொடுத்தார். ஆனாலும், மெல்லிய தேகத்திலிருந்து இளவரசன் மாறவேயில்லை. ஒரு நாள் முனிவர் ஒருவர் மன்னரைக் காண வந்தார். மன்னரின் முகக்குறிப்பை அறிந்து, ""உங்களுடைய மகன் விரைவில் இந்த நாட்டை ஆளுகின்ற வலிமை வாய்ந்த மன்னனாக உருப்பெறுவதற்கு ஏற்பாடு செய்கிறேன்'' என்றார். மன்னருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

""ஒரு நல்ல சிற்பியை வரவழையுங்கள் மன்னா'' என்றார், முனிவர். சிற்பியும் வருகை தந்தார். அச்சிற்பியிடம் ஒரு திடகாத்திரமான வலிமை வாய்ந்த வீரனைப் போல், இளவரசனது சிற்பத்தை வடிக்கச் சொன்னார். ஒரு வாரத்தில் அச்சிற்பம் தயாரானது. மன்னரின் அவையில் முனிவர் அச்சிற்பத்தை இளவரசனிடம் கொடுத்தார். அவ்வாறு தருகின்றபோது, ""ஒரு நாளில் எத்தனை முறை இச்சிற்பத்தைப் பார்க்க முடியுமோ... அத்தனை முறை பார்'' என்று கூறி இளவரசனை அனுப்பினார். இளவரசன் மறுநாள் காலையில் எழுந்ததும், உண்ணும்போதும், அறையில் உலவும்போதும், உறங்கியபோதும் அவர் கண்ணிலே அச்சிற்பம் பட்டு மனதிலே பிம்பமாய்ப் பதிந்தது. இளவரசனின் கனவிலே சிற்பத்திலிருப்பதுபோல் ஒரு வீர இளைஞனாக வரவேண்டும் என்ற ஆசை தோன்றியது.

அடுத்த நாள் அதிகாலையிலேயே ஓட்டம், குதிரையேற்றம், நீச்சல் பயிற்சி, வில்வித்தை என பல கலைகளிலும் இளவரசன் தன்னை ஐக்கியமாக்கினார். ஒவ்வொரு நாளும் நல்ல உணவுகளோடு உடற்பயிற்சியும் உடலுக்கு உரமானது, பொலிவற்று இருந்த உடலும், மனமும் நல்ல ஆரோக்கியமான மாற்றத்தால் வலுவாய் உருப்பெற்றதை அவரால் உணர முடிந்தது. மூன்றே மாதத்தில் அச்சிற்பத்தில் உள்ள இளவரசனைப் போல் கட்டழகு கைகள், கவின் மிகு தேகம் என திடகாத்திரமாகவே உருவாகியிருந்தார். மூன்று மாதத்தில் மன்னரின் கண்முன்னே ஒரு புஜபலம் பொருந்திய ஒரு புதிய இளைய தளபதி அந்நாட்டிற்கு உருவாகியிருந்தார். இம்மாற்றத்திற்கு காரணம் தனது இலட்சியத்தை சிற்பமாய்ப் பார்த்ததால்தான் என்றார் இளவரசன். இலக்கு தெரியாதவரை இளவரசன் ஒரு சாதாரண இளைஞன். இலக்கு தெளிவாகிய பின் இளவரசன் ஒரு வீரத்தலைவன். ஆம்! குறிக்கோள் தெளிவாகின்ற போது வாழ்க்கை தெளிவாகிறது .

சமயக்குரவர்கள் நால்வர்களில் ஒருவரான அப்பர் தனது வாழ்க்கை வரலாற்றினை படம் பிடித்துக் காட்டுவதுபோல "திருக்கொண்டிச்சரத்து' பாடலிலே எழுதியுள்ளார். அதில் தனது பால பருவத்தையும், காளைப் பருவத்தையும், முதுமைப் பருவத்தையும், அவர் குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்ததை, "பாலனாய் கழித்த நாளும், பனிமலர் கோதை மார்தம் மேலனாய் கழித்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து கோலனாய் கழித்த நாளும், குறிக்கோள் இலாது கெட்டேன்' என்கிறார். குறிக்கோளற்ற வாழ்வு, ஒரு குறையுள்ள வாழ்வு என்பதறிந்த பின்னர் குறிக்கோளோடு ஆன்மிகத்திற்காக மாபெரும் தொண்டாற்றினார். அதன் பின் அப்பரது வாழ்வு ஒரு குன்றின் மேலிட்ட விளக்கானது. குறிக்கோளில்லாத வாழ்க்கை திசைகாட்டி இல்லாத கடல் பயணம். அங்கே பயணம் இருக்கும், ஆனால் பலனிருப்பதில்லை.

மனித வாழ்விற்கு அடிப்படை, குறிக்கோள். ஒவ்வொரு மாணவனும் படிக்கின்றபோதே தன்னை ஓர் ஆசிரியராக, மருத்துவராக, பொறியாளராக, வழக்குரைஞராக, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரியாக, விளையாட்டு வீரனாக, அறிஞராக, கலைஞராக, கவிஞராக, கட்டுரையாளராக என ஏதாவது ஒருவகையில் தன்னை பரிணமித்துப் பார்ப்பதுண்டு. படிக்கின்ற மாணவர் ஒரு புழு என்றால், அழகிய வண்ணத்துப்பூச்சிதான் குறிக்கோளினை அடைந்ததன் அடையாளம். இக்குறிக்கோள்கள்தான் ஒரு தனிமனிதனின் வெற்றிக்கு அஸ்திவாரங்கள்.

இத்தகைய அஸ்திவாரங்களிலிருந்து "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப உயர்ந்து எழுவதுதான் உன்னதமான குறிக்கோள்கள். மருத்துவராகிய பின் மருத்துவத்தில் மகத்துவம் காண்பது உன்னதமான குறிக்கோள். அதேபோல் ஆசிரியராகிய பின் மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது, பொறியாளராகிய பின் உலகையே வியக்க வைப்பது, கலைஞராகிய பின் காண்பவர்களின் கண்கள் விரிய வைப்பது. விளையாட்டு வீரனாகிய பின் உலகையே உற்சாகத்தில் ஆழ்த்துவது என குறிக்கோள்களை பட்டை தீட்டி உன்னதமாக்கினால் தனிமனிதக் குறிக்கோளும் நிறைவேறுவதோடு இச்சமூகமும் அதனால் பயன்பெறும். அத்தகைய ""நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது'' என்கிறார் காரல் மார்க்ஸ். ""சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதனை அடைந்தே தீருவேன்'' என்ற பாலகங்காதர திலகரின் குறிக்கோள், "செய் அல்லது செத்துமடி' என மகாத்மா காந்தியின் இலட்சிய வரிகள்தாம் நம் தேசத்திற்கு விடுதலை பெற்றுத் தந்தது. திலகரும், காந்தியும் நம் தேசத்தின் வரலாறானார்கள்.

"தம்மின் தம்மக்கள் அறிவுடைமை' என்ற திருவள்ளுவரின் வரிகளை தங்களின் குறிக்கோளாக்கி ஒவ்வொரு பெற்றோரும் தங்களை விட தங்கள் குழந்தைகளை உயரிய நிலையை அடைய படிக்க வைக்கின்றனர். அதே நேரத்தில், படிக்கின்றபோதே தனது படிப்பால் தனது குடும்பத்தின் தரத்தை இன்றிருப்பதை விட பன்மடங்கு உயர்த்துவேன் என்ற மாணவனின் குறிக்கோள் மிகவும் உன்னதமானது.

குறிக்கோளினை மனிதன் தீர்மானிப்பது இயல்பு. ஆனால், மனிதர்களைக் குறிக்கோள்தான் தீர்மானிக்கிறது என்பது தான் நிஜம். குறிக்கோளில்லாத மனிதர்களை வாழும்போதே மக்கள் மறந்துவிடுகிறார்கள். தனிமனித வெற்றியை இலக்காகக் கொண்ட குறிக்கோள், அம்மனிதனோடு மறைந்துவிடுகிறது. தனது சமூகத்தினை உயர்த்திய குறிக்கோள்கள் அச்சமூகம் உள்ளவரை நிலைபெறுகிறது. இவ்வுலகம் உய்ய, உயர்ந்த குறிக்கோள்கள் கொண்டவர்கள்தான் இவ்வுலகே அழிந்தாலும் வாழ்ந்துகொண்டிருப்பர்.

"ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்திடல் வேண்டும்' என்ற ராமலிங்க சுவாமிகளின் இலட்சிய வார்த்தைகளும், "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!' என்ற தாயுமானவரின் குறிக்கோளும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலகிற்கு அறைகூவல் விட்ட கணியன் பூங்குன்றனாரின் சகோதரத்துவ சிந்தனையும், "சுதந்திரமான சுவர்க்க பூமியில் எனது நாடு விழித்தெழவேண்டும்' என்ற ரவீந்திரநாத் தாகூரின் "கீதாஞ்சலி'யின் ஏக்கமான வரிகளும் இந்த மண்ணினை மகத்துவமாக்கிய குறிக்கோளாளர்களின் வரிகள்.

குறிக்கோள்கள் பெரிதானால் நம் வாழ்க்கை பெரிதாகும். வாழ்க்கையில் மிகப்பெரிய இலட்சியம் வேண்டும் என்பதோடு நிறுத்தாமல் சிறு இலட்சியத்தை குற்றம் என்கிறார் நம் அப்துல் கலாம் அவர்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் ஒருவர், ""நாம் ஏன் இப்புவியில் இருக்கிறோம்?'' என்று கேட்டார். அதற்கு அவர், ""இப்பிரபஞ்சம் ஒரு விபத்து என்றால், நாமெல்லாம் விபத்துக்கள்தான். ஆனால் இப்பிரபஞ்சத்தால் ஏதாவது ஓர் அர்த்தம் இருந்தால் நமக்குள்ளும் ஓர் அர்த்தம் இருக்கிறது'' என்றார். அர்த்தமுள்ள வாழ்க்கைதான், அழகான வாழ்க்கை, அறிவான வாழ்க்கை, அற்புதமான வாழ்க்கை, ஆச்சரியமான வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கை குறிக்கோளில்லாமல் அமைவதில்லை. ஒரு தீர்க்கமான உயர்ந்த குறிக்கோளினை மனதில் ஆழமாய்ப் பதித்ததால் வெற்றி நிச்சயம்; வாழ்க்கையிலும் உயர்வு நிச்சயம். எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்ற திருவள்ளுவரின் வரிகள் ஒவ்வொரு இலட்சிய மனிதனின் மனதினிலும் ஆழப்பதியட்டும்.
நம் மனதிலே எண்ணம் உருவாகிறது. அது ஆழமாய் வேர்விட்டு ஆசையாய் முளைக்கிறது. பின்னர் குறிக்கோளாய் - மண்ணிலே செயல்பாடாய் வெளிவருகிறது. உண்மையில், நமது குறிக்கோள் நல்லதா? அதைத் தொடரலாமா? என்ற சந்தேகம் எழும்போது நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒரு மந்திரத் தாயத்தை தந்திருக்கிறார்.

"நீங்கள் பார்த்ததிலேயே ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்த பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகை செய்யுமா? என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்' என்பது தான் அந்த மந்திர தாயத்து.

"எழுமின்! விழுமின்! கருதிய காரியம் (குறிக்கோள்) முடியும் வரை நில்லாது உழைமின்!' என்ற சுவாமி விவேகானந்தரின் உயரிய சிந்தனைகளுக்கு உயிர் தர இந்தியர் ஒவ்வொருவரின் மனதிலும் திண்ணிய எண்ணம் உதயமாகட்டும்.
குறிக்கோளில்லாமல் வாழ்வது இறப்பு !
குறிக்கோளோடு வாழ்வதுவே சிறப்பு !!

31/07/2018 மேலும் தொடர