காக்க... காக்க... காலம் காக்க!
தினமணி
04/09/2018
தன்னிலை உயர்த்து! 8
ஒரு கிராமத்தில் ஒரு ஜென் குரு சிலகாலம் தங்கினார். அவரை அக்கிராமத்தின் ஏழை மனிதன் ஒருவர் நன்கு உபசரித்தார். அவரது உபசரிப்பிற்கு பரிசாக ஒரு பூவைத் தந்தார். "இப்பூவானது மந்திர சக்தி வாய்ந்தது. யாருக்கும் தெரியாமல் இப்பூவால் எந்த இரும்பைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும். இரண்டு நாட்கள் மட்டுமே இத்தகைய சக்தி அப்பூவிற்கு உண்டு. வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் குரு.
அவர் சென்ற பிறகு "ஓ! இன்னும் இரண்டு நாள் இருக்கின்றன. அதனால், நாளை பார்த்துக் கொள்ளலாம்" என்று முதல் நாளை ஒத்தி வைத்தார். மறுநாள் அவருக்கு சில அத்தியாவசிய வேலைகள் இருந்ததினால் அதில் மூழ்கிப்போனார். அன்று மதியம் நகரில் உள்ள இரும்புக் கடைக்குச் சென்றபோது தான் அன்று கடைகள் விடுமுறை என்பதை உணர்ந்தார்.
வேகமாக, பக்கத்து நகரத்துக்கு பயணித்தார். ஒரு டன் இரும்பினை வாங்கினார். கூலிக்கு ஆட்கள் கிடைக்காததால் தனியாய்ச் சுமந்தார். வீடு வந்து சேரும்போது இருட்டியிருந்தது. அப்பூவும் வாடி செயலற்றிருந்தது. கோபத்தில் பூவினைப் பிய்த்தார். அதில் ஒரு காகிதம் இருந்தது. "நண்பனே, நீ குறித்த நேரத்தில் செயல்படுத்தியிருந்தால், உனது வீட்டின் வாயிற்படியில் உள்ள இரும்பையாவது தங்கமாக மாற்றியிருக்கலாமே?' என எழுதப்பட்டிருந்தது.
இப்படித்தான், காலம் தனது வலிமையை அவ்வப்போது உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. காலம் பொன் போன்றது என்பதை விட காலம் வலிமையானது. இவ்வுலகில் எவருக்காகவும் தன்னை வளைத்துக் கொள்ளாதது. அது தனக்கென்ற ஒரு பயணத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. "காலத்தின் அருமையை உணருங்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்குவது, சோம்பேறியாகத் திரிவது, தள்ளிப்போடுவது போன்றவற்றைத் தவிர்க்க பழகுங்கள். இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப்போடாமல், இன்றே செய்து முடியுங்கள்'' என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞர் செஸ்டர்பீல்ட் பிரபுவின் வரிகள், ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் அசைபோட வேண்டிய வரிகள்.
உண்மையில், காலம் சோம்பேறியை ஓட வைக்கும். சாதாரண மனிதனோடு கைகுலுக்கும். உழைப்பவனுக்காக சேர்ந்தே உழைக்கும். வல்லவனுக்கு சற்று வழிகொடுக்கும். அதனால்தான் வெற்றியாளர்கள் காலத்தை வென்றவர்களாகின்றனர்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்
என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வரிகள்தான் இவ்வுலகினை தங்கள் உழைப்பால் வென்றவரின் அடிப்படை வரிகள்.
இறைவனின் படைப்பில், இயற்கையின் நியதியில் இருபத்தி நான்கு மணிநேரம் அனைவருக்கும் பொதுவானது. இதனை யார் ஒருவர் சரியாகப் பயன்படுத்துகிறார்களோ, அவர்களை இவ்வுலகம் வெற்றி மாலையிட்டு கைதட்டி அழகு பார்க்கிறது. ஆர்னால்ட் பென்னட் என்ற ஏழை எழுத்தாளர், தனது லட்சியத்தை தான் ஒரு சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்று உறுதியாக்கினார். தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யும் நேரம் தவிர, எஞ்சிய நேரத்தை எழுதுவற்கும், படிப்பதற்கும் பயன்படுத்தினார். இதனால், ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு புதிய சிந்தனை மலர்ந்தது. ஒவ்வொரு நாளிலும் ஒரு கதை அல்லது கட்டுரை அச்சில் வெளியாகியது. அதன் பின்னர் பென்னட்டைச் சந்தித்தவர்கள், "எப்படி உங்களால் இது சாத்தியமாகிறது? நேரம் எப்படி கிடைக்கிறது?'' என்று ஆச்சரியப்பட்டனர். அவர்களது கேள்விகளுக்கு தனது அனுபவத்தை 24 மணி நேரத்தை எவ்வாறு மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் பயன்படுத்துவது என்ற கட்டுரையாக்கினார்.
காலத்தை இரட்டிப்பது தான் காலத்திற்கு நாம் செய்யும் நன்றிக் கடன். காலம் என்பது அழகாய் வளர்ந்திட்ட ஒரு செடி. இதில் வெட்டுக்கிளி இலைகளைத் தின்று செடியை அழிக்கும். ஆனால், தேனீக்கள் தேனை உறிஞ்சினாலும், மகரந்த சேர்க்கைக்கு தூது செல்லும். தேனீக்களால் கனிகள் கருக்கொள்ளும். வெட்டிப் பேச்சுதான் வெட்டுக் கிளிகள். இவர்கள் நேரத்தைத் தின்பவர்கள். இவை வாழ்வின் அழிவுகள். ஆக்கப்பூர்வமே தேனீக்கள். தேனீக்கள் பலனை இரட்டிப்பாக்கும்.
காலம் தவறாமை என்பது இயற்கை என்னும் பள்ளிக்கூடம் நமக்கு அனுதினமும் கற்றுத் தரும் பாடம். அதிகாலைச் சூரியனும், மாலைச் சந்திரனும் ஒரு நாளும் காலதாமதத்திற்காக காரணம் தேடியதில்லை. சற்றே ஒய்வெடுத்துக் கொள்ள இவை எவரிடமும் கெஞ்சுவதில்லை. ஒன்று நிச்சயம். நாம் காலத்தை நிர்ணயிப்பதில்லை. காலத்தோடு நாம் பயணிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கை தன்னைத் தானே நிர்வகிப்பது போல், நாம் நம்மை நிர்வகித்துக் கொண்டால், காலத்தின் ஓட்டத்தில் நாம் மீன்கள் போல் எதிர் நீச்சலிடலாம்.
ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது அவரது ஒட்டு மொத்த நிமிடங்களின் வாழ்க்கை. நிமிடங்களைச் சரிபடுத்தினால் வாழ்வு சரியாகும். நேரத்தின் நிர்வாகம் என்பது ஒரு கிரிக்கெட் விளையாட்டைப் போன்றது. ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு மணி நேரம். ஒரு ஓவரில் ஆறு பந்துகளுக்கு, அதிக ரன் எடுப்பவர் தான் "ஆட்ட நாயகனாக வாய்ப்பு அதிகம். அதுபோலத்தான் கிடைக்கின்ற நேரத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதன் மூலமே அதன் விளைவுகளும் அமைவதுண்டு.
மகாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை இரயிலில் பயணம் செய்யும் போது, அவரது உதவியாளிடம், "நேரம் என்ன ?'' என்று கேட்டார். "ஐந்து மணி'' என்றார் உதவியாளர். காந்தியின் கடிகாரத்தில் ஐந்து மணியாக இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. கிடைத்த ஐந்து நிமிடத்தில் ஒரு கடிதம் எழுதி முடித்தார் மகாத்மா காந்தி. பின்னர் உதவியாளரிடம், "ஒரு நிமிடத்தில் எத்தனையோ வெற்றி தோல்விகள் மாறியிருக்கின்றன. ஐந்து நிமிடம் என்பது எனது வாழ்வில் மட்டுமல்ல, இந்தியர்களின் வாழ்வில் மிக முக்கியமானது. சரியான நேரம் சொல்லத் தவறிய உங்களுக்கு கடிகாரம் எதற்கு?'' என்று கடிந்து கொண்டார்.
சாதாரண மனிதர்களுக்கு வாழ்க்கை பொழுதுவிடிவதிலும், மறைவதிலும் கழிந்து விடுகிறது. நடுத்தர மனிதர்களின் வாழ்க்கை மணிகளில் எண்ணப்படுகிறது. உயர்ந்தவர்களின் வாழ்க்கை நிமிடங்களில் கணக்கிடப்படுகிறது. சாதனையாளர்கள் கடிகாரத்தின் வினாடி முள்ளோடு போட்டி போட்டுக்கொண்டிருப்பவர்கள்.
அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை அவசரமானது, அவசரமில்லாதது, முக்கியமானது மற்றும் முக்கியத்துவமில்லாதது என வகைப்படுத்தலாம். அவசரமானதையும், முக்கியமானதையும் அன்றே செய்தால் அந்தந்த நாளில் வெற்றி பெற முடியும். இது காட்டுத்தீயை அணைப்பதைப் போன்றது. புதிய சிந்தனைகள் அற்றது. அவசரமில்லாததையும், முக்கியமில்லாததையும் அந்த நாளில் செய்பவர் நேரத்தை விரயம் செய்பவராவார். இது பொழுதுபோக்குபவர்களின் பண்பு. முக்கியமில்லாதவற்றில் அவசரமாக ஈடுபடுபவர்கள் வெற்றிக்கோட்டினைத் தொட வெகுநேரமாகும். ஏனெனில், இவர்களின் பணிக்கிடையில் வாட்ஸ்அப்பும், பேஸ்புக்கும், டிவிட்டரும் காலத்தைச் சுரண்டிவிடும். கதே என்ற ஜெர்மன் நாட்டு அறிஞர், "அதிக முக்கியமான விசயங்கள், முக்கியத்துவமற்ற விசயங்களின் தயவில் ஒரு போதும் இருக்கக் கூடாது'' என்பார். அவசரமில்லாத ஆனால் முக்கியமானவற்றைச் செய்பவர்கள் தான் திட்டமிட்டு வாழ்வை நடத்துபவர்கள். அவர்களே வெற்றியாளர்கள்.
2002 ஆம் வருடம் தன்னை உருவாக்கிய "மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' க்கு ஒரு பாடம் நடத்துவதற்காக சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது ரயில்வே கேட் அருகில் கடுமையான போக்குவரத்து நெரிசல். அப்துல் கலாம் வர இன்னும் சற்று நேரம் ஆகும், போக்குவரத்து சீரடையவில்லை எனப் பேசி கொண்டிருந்தனர். வாகனத்திலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினார். அவர்களின் கண்கள் விரிய அப்துல் கலாம் சரியான நேரத்தில் வகுப்பறைக்குள்ளே நுழைந்தார். காலம் கடந்து வந்தார் கலாம் என்பதை மாற்றி காலம் கடந்து நின்றார். "உனது எல்லா நாள்களிலும் தயாராக இரு' என்ற 19 ஆம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்த ஒரு கவிஞனின் வரிகள் காலத்தால் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளின் அற்புதத்தை பறைசாற்றுகிறது. எனவே, நேர நிர்வாகம் ஒரு மனிதனை, ஒழுங்குபடுத்தும். அவரது செயல்பாட்டினை முன்னுரிமைப்படுத்திக் காட்டும். முன்யோசனையுடன் நடந்துகொள்ள வைக்கும். திட்டமிடத் துணை நிற்கும்.
காலத்தைத் திட்டமிடுதல் வாழ்க்கையை திட்டமிடுதலாகும். ஒவ்வொரு மாதமும் திட்டமிடுவதை விட, ஒவ்வொரு வாரத்திலும் திட்டமிடுவதே இலட்சியத்தை அடைய எளிய வழி. ஆனால், காலத்தைச் செலவழிக்கும் போது நாள் கணக்கிலோ, மாதக் கணக்கிலோ செலவழிக்காமல், மணிக்கணக்கிலோ, நிமிடக் கணக்கிலோ செலவழிக்க வேண்டும். அதனை அட்டவணைப்படுத்தி செலவிற்கான நேரத்தை பணத்தை செலவழிப்பதைபோல் எழுதி வர வேண்டும். நாம் காலத்தை கணக்கிட்டு வாழ்ந்திருந்தால் எதிர்கால சந்ததியினருக்கு நமது வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. அட்டவணைப்படுத்தி வாழத் தவறியிருந்தால் நமது வாழ்க்கை ஓர் எச்சரிக்கை. பயனோடு கழிக்கின்ற காலங்கள் மனிதனை வெற்றி என்னும் நட்சத்திரம் நோக்கி நகர்த்துகிறது.
செந்நிறச் சூரியோதமாய்ப் புலர்ந்து, மித வெயிலில் செடிகள் மலர, கடும் வெயிலில் நிழல்கள் மறைய, மாலை வெயிலில் நீளும் நிழல்கள் கடந்து, ஒளிந்திருக்கும் சந்திரனிடம் பளிச்சிடும் நட்சத்திரங்கள், முகம் மலர் நிலவிடம் பேசிடும் அல்லி போல், ஒரு நாளென்பது ஒரு கதம்பக் கவிதையாய் மலர்ந்திருக்க வேண்டும். அது "பணியின் நேரம், வெற்றியின் பரிசு; சிந்திக்கும் நேரம், சக்தியின் பிறப்பிடம்; விளையாடும் நேரம், நீங்கா இளமையின் ரகசியம்; வாசிப்பின் நேரம், அறிவின் ஊற்று; நட்பின் நேரம், மகிழ்ச்சியின் பாதை; அன்பின் நேரம், கடவுளின் வாய்ப்பு; சுற்றத்தோடு செலவிடும் நேரம், தன்னலத்தை குறைக்கும்; சிரித்து மகிழும் நேரம், ஆத்மாவின் ஓசை' என்ற அயர்லாந்து நாட்டு கவி வரிகள்போல் கலந்திருக்க வேண்டும்.
நமது வாழ்வு நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. குழந்தைப் பருவங்கள் அறியாமலே கழிந்து விடுகின்றது. முதுமைப் பருவங்கள் அனுபவப் பகிர்விலேயே அடங்கிப் போகிறது. இடைப்பட்ட காலங்களை நமது பாரதத்தின் முதல் பிரதமர் தனது மேசையில் வைத்திருந்த ராபர்ட் ப்ரோஸ்ட் என்னும் அமெரிக்க கவிஞரின்
Woods are lovely dark and deep
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep
என்ற சிற்றோடையின் ஓட்டம் போல் சில வரிகளால் உந்தினால், அரட்டைகள் குறையும், ஆற்றல் அதிகரிக்கும்.
எந்த நேரத்தில் எதைத் தொடங்கலாம் என்று தினமும் நாட்காட்டியின் பின்புலத்தைப் பார்ப்பவர்களுக்கு, வாழ்வதன் நன்புலத்தை "நாளும் கோளும் நலிந்தவர்க்கு இல்லை' என்பது தெளிவாக்கும். கிடைக்கின்ற நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்ற தெளிவு கொண்டவனுக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. விண்ணில் செல்கின்ற ராக்கெட்டுக்கு பயணம் தொடங்கும் நேரத்தை வேண்டுமென்றால் நாம் தீர்மானிக்கலாம், அதன் பிறகு அது கடக்கும் லட்சக்கணக்கான மைல்களுக்கு எந்த நாட்காட்டியிலிருந்து நல்ல நேரம் பார்க்க முடியும்?
இவ்வுலகில் இழந்த பணத்தைப் பெற்றுவிடலாம்; இழந்த நட்பைப் புதுப்பித்துவிடலாம். ஆனால் கடந்த காலத்தை எவராலும் திரும்பப் பெறமுடியாது.
ஒரு வேட்டைக்காரன் கையில் கவணுடன் காட்டிற்குச் சென்றான். ஒரு மரத்தின் மேலிருந்த பறவையினை தனது கவணால் அடிக்க, கீழே கிடந்த அழகிய சிறு கற்களை எடுத்தான். ஒவ்வொன்றாய் கவணில் கட்டி வீசினான். பறவையின் மீது படவில்லை. சிறிது நேரத்தில் அப்பறவையும் பறந்தது. எறிந்த கற்களெல்லாம் அருகில் ஓடிய நதியில் விழுந்தது. எஞ்சியிருந்த ஒரு கல்லினைப் பார்த்தான். அழகாய் இருந்தது. ஆசையாய் விளையாடும் தன் குழந்தைக்கு அதைப் பரிசளிக்க வீட்டிற்கு எடுத்து வந்தான். வரும் வழியில் ஒரு வைர வியாபாரியைச் சந்தித்தான். அவர் அக்கல்லை வைரமென்று தெரிந்ததும், அதிக விலை கொடுத்து வாங்கினார். கை நிறையப் பணம் கிடைத்த பின்பும் சோகமாயிருந்தான். காரணம் கேட்டார், வைர வியாபாரி. "ஆற்றில் எறிந்த அத்தனை கற்களையும் வைரமென்று தெரியாமலே எறிந்துவிட்டேனே! இது எனக்கு முன்னமே தெரிந்திருந்தால் நான் பெரிய அதிர்ஷ்டசாலியாய் இருந்திருப்பேனே?'' என்றார். அது போலத்தான் ஒவ்வொரு நாளும் வைரக்கற்கள். மிகவும் கிடைத்தற்கரியது.
காலம் விலைமதிக்க முடியாத பரிசு!
காக்க... காக்க... காலம் காக்க!
ஐயா தங்களின் பதவி உயர்வு பற்றி அறிந்தேன், மிகவும் மகிழ்ச்சி நமது மாவட்டத்திற்கும் உங்களின் கிராமத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்.
S.P. JEGAN.தேனீ மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் திரு. திருநாவுக்கரசுவின் புகழ் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவட்டும். உங்களின் திருக்குறளோடு நாம் எனும் Whats App காணொளிகள் மிகவும் அருமை. இதுவரை திருக்குறளை படிக்காத நபர்களை கூட உங்களின் காணொளிகள் படிக்க வைக்கிறது.
சுருளிராஜ் பாண்டியன்.சின்னஞ்சிறு வயதில் உங்களை நான் தொடர்பு கொண்ட அனுபவத்தை நான் இப்போது என்னால் மறக்க இயலாது. உங்களின் திருக்குறளோடு நாம் இந்த காணொளிகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கணும்.
Jegan SP.