நாளிதழ் செய்திகள்
 

திருக்குறள் பிரியர்
முகநூல் பக்கத்தில் எடுக்கப்பட்டது
23/06/2018

திருக்குறள் பிரியர்: ஒருவர் 100 திருக்குறளை படித்து அதன்படி நடந்தாலே போதும் அவரை யாராலும் வீழ்த்த முடியாத நிலைக்கு முன்னேறுவார் என நம்பிக்கையுடன் கூறுகிறார் IPS அதிகாரி திருநாவுக்கரசு.

தேனி மாவட்டம் S.ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த இவர் படித்ததெல்லாம் அரசு பள்ளியில் தான், பள்ளி படிப்பை ரெங்கசமுத்திரம் பள்ளியிலும், மேல்நிலை படிப்பை ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முடித்தார். சோழவந்தான் திருவேடகம் பள்ளியில் இயற்பியல் பட்டமும் மதுரை காமராஜர் கல்லூரியில் MSC பட்டமும் முடித்து, தந்தை விரும்பியதால் சட்டப்படிப்பையும் முடித்து வைத்தார்.

படித்தது அறிவியல் என்றாலும் தமிழ் இலக்கியம் மீது ஈடுபாடு அதிகம். இளைஞர் நலத்துறை நடத்திய வினாடி வினா நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக சென்றவர். போட்டியாளர்களுக்கு தெரியாத கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்து அசத்தினார். இன்றைய மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லத்துரை உங்கள் அறிவை ஏன் போட்டி தேர்வுக்கு பயன்படுத்தகூடாது என்ற கேட்ட பிறகுதான் TNPSC Group 1 தேர்வுக்கு தயாரானார். 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற Group 1 தேர்வில் பங்கேற்ற அவர் போட்டியிட்ட முதல் தேர்விலேயே வெற்றி பெற்று அதே ஆண்டில் DSP ஆக பணி அமர்த்தப்பட்டார்.

வீரப்பன் தேடுதல் படலத்தில் 100 பேர் கொண்ட படைக்கு தலைவராகவும், 7 ஆண்டுகள் வனப்பகுதியில் சிறப்பு அதிவிரைப்படை பிரிவிலும் பணியாற்றிய இவருக்கு 2007 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் கையால் வீரதீர செயலுக்கான விருது கிடைத்தது. 2015 ஆம் ஆண்டு IPS அதிகாரியாக பதிவி உயர்வு பெற்றார்.

மேடைப்பேச்சாளர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். பள்ளி கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பணியில் சேர்ந்த நாள் முதல் 2000க்கும் மேற்பட்ட மேடைகளில் உரையாற்றி உள்ளார்.

2015ல் அவர் எழுதிய உன்னுள் யுத்தம் செய் என்ற புத்தகம் இளைஞர்கள் இடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது குறித்து அவர் கூறும் போது கேளிக்கைகளில் நேரத்தை வீனடித்து லட்சியப்பாதையில் இருந்து விலகும் மாணவர்கள் இளைஞர்களுக்காக எழுதப்பட்ட நூல் இது. திருக்குறலோடு தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக ஒரு குறள் ஒரு பொருள் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதி வருகிறேன் என்றார்.

தற்போது சென்னை நுண்ணறிவு பிரிவு ஆணையராக பணியாற்றி வரும் அவர், தினமும் காலை பணிக்கு வந்தவுடன் போலிசாரை அழைத்து அவர்களுக்கு தினமும் ஒரு திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்லி நடைமுறை வாழ்க்கையோடு கற்று கொடுக்கிறார்.

வாட்சப்பையும் விட்டு வைக்காமல் அதன் மூலமாகவும் திருக்குறளை பரப்பி வருகிறார். மாதந்தோறும் ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று குடும்பத்தோடு சென்று மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாக செய்து வருகிறார். தனிமனிதனாக 25,000 மரக்கன்றுகளையும், குழுக்களாக சேர்ந்து பல லட்சம் மரக்கன்றுகளும் நட்டு வைத்திருக்கிறார்.

வெளி மாநிலம், வெளி நாடு சென்றாலும் தமிழரின் மிகப்பெரிய அடையாளம் திருக்குறளும் திருவள்ளுவரும் தான். உலகமே போற்றும் பொக்கிசம் நம்மிடம் இருப்பதால் நாம் அதை காப்பது அவசியம். ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் 100 திருக்குறளையாவது படித்து நடந்தால் அவரை யாராலும் வீழ்த்த முடியாது என்கிறார் நம்பிக்கை பொங்க.

காக்கி சட்டைக்குள்ளும் கவிதை பேசும் மனம் இருக்கும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் இந்த திருக்குறள் பிரியர் திருநாவுக்கரசு.