நாளிதழ் செய்திகள்
 

120 கிராமங்களைத் தத்தெடுத்த போலீஸ் போதையில்லா சமுதாயத்தை உருவாக்க புதிய முயற்சி
தினத்தந்தி
09/09/2026

120 கிராமங்களைத் தத்தெடுத்த போலீஸ் போதையில்லா சமுதாயத்தை உருவாக்க புதிய முயற்சி பணம், புகையிலை, சிகரெட், கஞ்சா முதல் மெத்தபெட்டமைன், ஹெராயின் வரை பல்வேறு பெயர்களில் போதைப்பொருள் நுழைவு அதிகரித்து வருகிறது. வாழ்க்கையை சீரழிக்கும் ஆபத்துகளில் போதைப்பொருளும் ஒன்று. பெரும்பாலும் இளைஞர்களே போதைக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர். போதைப்பொருள் ஊடுருவலை கட்டுப்படுத்த போலீசார் கடிவாளம் போடுகின்றனர். ஆனால், “திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பது போல போதைப்பொருள் விழிப்புணர்வு ஒவ்வொருவரிடமும் ஏற்பட்டால் மட்டுமே அதன் பயன்பாட்டை தடுக்க முடியும். அதன் முன்னெடுப்பாக நெல்லை சரகத்தைச் சேர்ந்த தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் இளைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டு வருகிறது. 120 கிராமங்கள் தத்தெடுப்பு போதையில்லா சமுதாயத்தை உருவாக்கும் புதிய முயற்சியாக நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு அறிவுறுத்தலின்பேரில், ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் உட்பட்ட பகுதிகளில் தலா ஒரு கிராமம் என்ற அடிப்படையில் சுமார் 120 கிராமங்களை போலீசார் தத்தெடுத்துள்ளனர். அந்த கிராமங்களில் யாராவது போதைப்பொருட்களை விற்பனை செய்கிறார்களா? இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்களை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர். இதற்காக அந்தந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக பார்க்காமல்... ஏற்கனவே போதைப்பழக்கத்திற்கு ஆளானவர்களை குற்றவாளிகளாக மட்டும் பார்க்காமல், அவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்டு மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு வரவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிப்பு உள்ளிட்டவை குறித்து போலீசார் எடுத்துக்கூறுகின்றனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். நண்பர்களின் தவறான தூண்டுதலுக்கு இளைஞர்கள் ஆளாகாமல், “போதைப்பொருள் வேண்டாம்” என்று உறுதியாக சொல்ல வேண்டும். காவல்துறையின் கடமை போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடுப்பது காவல்துறையின் முக்கிய கடமையாகும். இளைஞர்களை பாதுகாப்பதும், அவர்களின் எதிர்காலத்தை நல்ல பாதையில் கொண்டு செல்வதும் காவல்துறையின் முக்கிய நோக்கமாகும். “போதை இல்லாத கிராமம்” உருவாக்கும் இந்த முயற்சியில் பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.