-
1காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து விளக்கம்
விளக்கம்:
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
-
2கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன் விளக்கம்
விளக்கம்:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.
-
3நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர் விளக்கம்
விளக்கம்:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
-
4கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு விளக்கம்
விளக்கம்:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.
-
5நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது விளக்கம்
விளக்கம்:
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
-
6நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன் விளக்கம்
விளக்கம்:
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.
-
7நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது விளக்கம்
விளக்கம்:
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?
-
8துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து விளக்கம்
விளக்கம்:
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.
-
9நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர் விளக்கம்
விளக்கம்:
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.
-
10நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர் விளக்கம்
விளக்கம்:
நனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?
ஐயா தங்களின் பதவி உயர்வு பற்றி அறிந்தேன், மிகவும் மகிழ்ச்சி நமது மாவட்டத்திற்கும் உங்களின் கிராமத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்.
S.P. JEGAN.தேனீ மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் திரு. திருநாவுக்கரசுவின் புகழ் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவட்டும். உங்களின் திருக்குறளோடு நாம் எனும் Whats App காணொளிகள் மிகவும் அருமை. இதுவரை திருக்குறளை படிக்காத நபர்களை கூட உங்களின் காணொளிகள் படிக்க வைக்கிறது.
சுருளிராஜ் பாண்டியன்.சின்னஞ்சிறு வயதில் உங்களை நான் தொடர்பு கொண்ட அனுபவத்தை நான் இப்போது என்னால் மறக்க இயலாது. உங்களின் திருக்குறளோடு நாம் இந்த காணொளிகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கணும்.
Jegan SP.