-
1சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும் விளக்கம்
விளக்கம்:
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.
-
2நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு விளக்கம்
விளக்கம்:
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
-
3மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல் விளக்கம்
விளக்கம்:
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
-
4மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு விளக்கம்
விளக்கம்:
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.
-
5மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும் விளக்கம்
விளக்கம்:
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.
-
6மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை விளக்கம்
விளக்கம்:
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.
-
7மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும் விளக்கம்
விளக்கம்:
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
-
8மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து விளக்கம்
விளக்கம்:
மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.
-
9மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து விளக்கம்
விளக்கம்:
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
-
10நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில் விளக்கம்
விளக்கம்:
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
ஐயா தங்களின் பதவி உயர்வு பற்றி அறிந்தேன், மிகவும் மகிழ்ச்சி நமது மாவட்டத்திற்கும் உங்களின் கிராமத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்.
S.P. JEGAN.தேனீ மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் திரு. திருநாவுக்கரசுவின் புகழ் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவட்டும். உங்களின் திருக்குறளோடு நாம் எனும் Whats App காணொளிகள் மிகவும் அருமை. இதுவரை திருக்குறளை படிக்காத நபர்களை கூட உங்களின் காணொளிகள் படிக்க வைக்கிறது.
சுருளிராஜ் பாண்டியன்.சின்னஞ்சிறு வயதில் உங்களை நான் தொடர்பு கொண்ட அனுபவத்தை நான் இப்போது என்னால் மறக்க இயலாது. உங்களின் திருக்குறளோடு நாம் இந்த காணொளிகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கணும்.
Jegan SP.