-
1வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல் விளக்கம்
விளக்கம்:
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.
-
2இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து விளக்கம்
விளக்கம்:
தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.
-
3உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன் விளக்கம்
விளக்கம்:
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.
-
4கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு விளக்கம்
விளக்கம்:
முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகையைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.
-
5காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு விளக்கம்
விளக்கம்:
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.
-
6வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட விளக்கம்
விளக்கம்:
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
-
7புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின் விளக்கம்
விளக்கம்:
என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?
-
8வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து விளக்கம்
விளக்கம்:
அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.
-
9ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு விளக்கம்
விளக்கம்:
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.
-
10பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால் விளக்கம்
விளக்கம்:
துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப் பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?
ஐயா தங்களின் பதவி உயர்வு பற்றி அறிந்தேன், மிகவும் மகிழ்ச்சி நமது மாவட்டத்திற்கும் உங்களின் கிராமத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்.
S.P. JEGAN.தேனீ மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் திரு. திருநாவுக்கரசுவின் புகழ் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவட்டும். உங்களின் திருக்குறளோடு நாம் எனும் Whats App காணொளிகள் மிகவும் அருமை. இதுவரை திருக்குறளை படிக்காத நபர்களை கூட உங்களின் காணொளிகள் படிக்க வைக்கிறது.
சுருளிராஜ் பாண்டியன்.சின்னஞ்சிறு வயதில் உங்களை நான் தொடர்பு கொண்ட அனுபவத்தை நான் இப்போது என்னால் மறக்க இயலாது. உங்களின் திருக்குறளோடு நாம் இந்த காணொளிகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கணும்.
Jegan SP.